2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

’மலையக மக்கள் முன்னணிக்குள் நெருக்கடி வலுக்கிறது’

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஞ்சித் ராஜபக்‌ஷ

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாருக்கு வாய்ப்புகளை வழங்குவது என்பது தொடர்பில், மலையக மக்கள் முன்னணியில் நெருக்கடி நிலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், மலையக மக்கள் முன்னணி  தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்தே போட்டியிடவுள்ள நிலையில், அக்கட்சியில் மூவருக்கே வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

குறிப்பாக கட்சியின் ஸ்தாபகர் அமரர் சந்திரசேகரனின் புதல்வியும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரனுக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட போவதில்லை என்று கட்சியின் உயர்மட்டம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொதுத் தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு மலையக மக்கள் முன்னணியில் வாய்ப்பு மறுக்கப்படுமாயின், வேறொரு கட்சி அல்லது சுயாதீனமாக தான் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்குவதாக கட்சியின் உப செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவம் சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

இந்நிலையில் கட்சியின் தலைமைத்துவமும் அனுஷா சந்திரசேகரனும் ஒருவரை ஒருவர் மாறி,மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொள்வதால்  கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

பொதுத்தேர்தல் நெருங்கும் நேரத்தில், இவ்வாறான செயற்பாடுகள் கட்சியின் பிளவுக்கு வழிவகுக்கும் என்றும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கட்சியின் ஸ்தாபகர் பெ.சந்திரசேகரனின் மறைவுக்குப் பின்னர், கட்சியின் வளர்ச்சிக்கு தான் பாரிய தியாகங்களை செய்துள்ளதாக கட்சியின் தற்போதைய தலைவரான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் இவ்வாறான நெருக்கடி நிலையை ஏற்படுத்துவதன் மூலம், பொதுத் தேர்தலில் தமது கட்சி பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் எனவே, இது தொடர்பிரல் கட்சியின் செயற்குழுவுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரின் சகோதரரை நுவரெலியா மாவட்டத்தில் களமிறக்குவதற்காக அனுஷா சந்திரசேகரன் செயற்படுவதாக, மலையக மக்களின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர்  எம்மிடம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--