2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

புத்தாயிரமாண்டு இலக்குகள் பெருந்தோட்டத் துறையில் படு தோல்வி:மனோ கணேசன்

Super User   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                    (எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
"இந்நூற்றாண்டில் ஆரம்பத்தில் ஐ.நா சபையால் நிர்ணயிக்கப்பட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் தொடர்பிலான புத்தாயிரமாண்டு  இலக்குகளை இலங்கை வெற்றிகரமாக அண்மித்து வருவதாக ஜனாதிபதி ஐ.நா உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த இலக்குகளில் வறுமை குறைப்பு என்பது முக்கியமானதாகும். தேசிய ரீதியாக இலங்கையிலே வறுமை குறைந்திருந்தாலும், மலையக பெருந்தோட்டங்களில் வறுமை அதிகாரித்துள்ளது. எனவே மலையக பெருந்தோட்டத் துறையை பொறுத்த வரையில் ஜனாதிபதி ஐ.நா சபையில் தெரிவித்த கருத்து தவறானதாகும்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஐ.நா உரை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது:
 
2015ஆம் ஆண்டையே மில்லேனியம் இலக்குகளின் கால எல்லையாக ஐ.நா தீர்மானித்துள்ளது. அந்த 2015ம் ஆண்டில் அடையவேண்டிய சமூக பொருளாதார இலக்குகளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் உலக வங்கி உட்பட சர்வதேச நிதி நிறுவனங்கள் செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றன.  2015ஆம் ஆண்டில் இலங்கை எட்டவேண்டிய தேசிய வறுமை நிலை 13 விகிதமாகும். 2002ஆம் ஆண்டில் 23 விகிதமாக இருந்த இந்த விகிதாசாரம் இன்றைய 2011ஆம் ஆண்டில் சுமார் 15 விகிதமாக குறைந்திருக்கின்றது. எனவே இன்னும் நான்கு வருடம் கழித்து 2015ஆம் ஆண்டில் மில்லேனியம் இலக்கான 13 விகிதத்தை மிக சுலபமாக இலங்கை தொட்டுவிடும் என்பதையே ஜனாதிபதி பெருமிதமாக குறிப்பிடுகின்றார்.
 
ஆனால் இலங்கையில் மலையகத்தின் பெருந்தோட்டத் தமிழ் தொழிலாளர் சமூகத்தில் 2002ஆம் ஆண்டிலேயே வறுமை நிலை 30 விகிதமாக இருந்தது. இன்றைய 2011ஆம் ஆண்டில் அது குறைவதற்கு பதிலாக சுமார் 33 விகிதமாக உயர்ந்திருக்கின்றது. எனவே இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து மில்லேனியம் இலக்குகளின் இறுதி ஆண்டான 2015ஆம் ஆண்டில் மலையக பெருந்தோட்டத் துறையில் வறுமை நிலை 35 விகிதத்தை கடந்து விடக் கூடிய மோசமான நிலைமை நிலவுகின்றது.
 
ஒரு தீவான இலங்கைக்குள்ளே மலையக பெருந்தோட்டத் துறை இன்னும் ஒரு தீவாக இருப்பதையே இது காட்டுகின்றது. இதற்கு இன்றைய அரசாங்கம் உட்பட இந்நாட்டை தொடர் ச்சியாக ஆண்டு வந்த அரசாங்கங்களும், இந்த அரசாங்கங்களுக்குள்ளே இடம்பெற்றுவரும் மலையக அரசியல் பிரதிநிதிகளும் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்கத்திற்குள் சங்கமமாகியுள்ளனர். இவர்கள் இந்த மலையக வறுமை நிலமையை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். ஏனைய கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி ஆகிய அனைத்து இலக்குகளுக்கும் இந்த வறுமை என்ற விடையம் தான் அடிப்படையாக இருக்கின்றது. மலையகத்திலே வறுமையை போக்குவதற்கு ஆளுகின்ற அரசாங்கத்தையும், சர்வதேச சமூகத்தையும் முடுக்கிவிட வேண்டிய கடமை, இன்றைய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து மலையக அரசியல் கட்சிகளினதும் தலையாய கடமை ஆகும்"


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--