2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

அரசின் ஏகாதிபத்திய செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைய ரணில் அழைப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

அரசாங்கத்தின் ஏகாதிபத்திய செயற்பாடுகள் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கண்டி புஷ்பதான மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கி அவர்களுக்கு கௌரவமளித்துள்ள அரசாங்கம், பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிய சரத் பொன்சேகாவுக்கு 30 மாதச் சிறைத் தண்டனையை வழங்கியுள்ளமையானது ஜனநாயக விரோத செயலாகும்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக விரோத செயற்பாடுகள் மற்றும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு எதிரானதுமான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்த மக்கள் ஒன்றுகூடல் நிகழவொன்று இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கண்டியில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்ததாவது :-

"1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தேர்தல் கூட்டத்தின் போது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் சந்திரிகா கடும் காயங்களுக்கு உள்ளாகி ஒரு கண்ணையும் இழந்தார்.

அத்துடன் அந்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்திற்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல் என்பவருக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறந்த தண்டனை விதித்துள்ளது.

ஆனால் இவ்வாறான பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு நாட்டை ஐக்கியப்படுத்திய சரத் பொன்சேகாவை ஜனாதிபதி அப்போது பாரட்டிய போதும் இன்று அவருக்கு 30 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, தலதா மாளிகை குண்டு வெடிப்பிற்கும் அரந்தலாவ கொலைகளுக்கும் காரணமாக இருந்த கருணாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சரத்பொன்சேகா செய்த ஒரேதவறு ராஜபக்ஷவை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதே. ராஜபக்ஷவை ஆதரிப்பவர்களுக்கு அமைச்சு பதவிகள், அவருக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு சிறைத்தண்டனை, அச்சுறுத்தல் போன்ற ஏகாதிபத்திய ஜனநாயக விரோதச் செயல்களே இடம்பெறுகின்றது.

இன்று பலர் அச்சுறுத்தப்படுகின்றனர். ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் அச்சுறுத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். ஊடகங்கள் சுதந்திரமாக சுவரொட்டிகளைக் கூட ஒட்டமுடியாதுள்ளன. அவ்வாறு ஒட்டுபவர்கள்; பொலிஸ் கைதுகளுக்கும் விசாரணைகளுக்கும் ஆளாக நேரிடுகின்றது.

இன்று இவ்வாறான அச்சுறுத்தல்கள் காரணமாக சில அமைச்சர்கள் கூட பயந்துபோயுள்ளனர். பால்மா – அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இன்று மக்களால் தாங்கிக் கொள்ள முடியாதளவு விலை உயர்வு கண்டுள்ளது.

எனவே அரசின் இவ்வாறான ஏகாதிபத்திய செயற்பாடுகளுக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும் நாம் ஒன்றுப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என்றார்.

இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரும் கருப்பு பட்டியணிந்து சரத் பொன்சேக்காவின் விடுதலை வேண்டி ஊர்வலமாகச் சென்று நாத தேவாலய பூமியில் விஷேட பூஜைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--