2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இந்திய வம்சாவளி சமூகத்தின் தேவை குறித்து இந்தியா கவனம்-அசோக் கே.காந்தா

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத்தின் நலனை அடிப்படையாகக்கொண்டு வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் தொடர்பில் முக்கிய கவனம் எடுத்து அவை தொடர்பான வேலைத்திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கேற்ப இந்திய தூதரகத்தினால் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி மினிபஸ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பஸ்ஸை உத்தியோகப்பூர்வமாக பாடசாலைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று 7ஆம் திகதி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில்; இடம்பெற்ற போது  அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் "இந்திய அரசாங்கம் இலங்கையிலுள்ள பல்வேறு அமைப்புகளுக்கு இதுவரை 55 பஸ்களை 55 வழங்கியுள்ளது. இந்தியாவும் இலங்கையும் மிகவும் நட்புறவான நாடுகளாகும். அத்தோடு இந்த இரு நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு உறவுகள் உள்ளன.

இந்நிலையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களான பெருந்தோட்ட மக்களிடத்தில் இந்திய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த மக்களுக்குப் பல்வேறு தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலிருப்பது குறித்து நாம் நன்கு அறிந்துள்ளோம். இந்த நிலையில் இந்த மக்களின் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி ஆகியன தொடர்பில் வேலைத்திட்டங்களை முன்வைத்து அவற்றினை மேற்கொண்டு வருகின்றோம்.

இதனடிப்படையில் இந்திய - இலங்கை அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்த வீடுகளில் 5 ஆயிரம் வீடுகள் மத்திய மாகாணத்திலுள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
 
அத்துடன் ஹட்டன் - டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையை 150 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தும் பணிகளை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் இந்திய அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

மேலும் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் உயர்க்கல்விக்காக இந்திய அரசாங்கம் புலமைப்பரிசில் திட்டமொன்றினையும் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளது. பெருந்தோட்டப்பகுதி மக்களின் வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் தொடரபிலான இந்திய அரசாங்கத்தின் இத்தகைய வேலைத் திட்டங்களை படிப்படியாக முன்னெடுப்பதில் அக்கறையுடன் செயற்படுவோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .