2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டியில் மேலும் பல அபிவிருத்திகள்: நகரசபைத் தலைவர்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்சுவர்ணஸ்ரீ)

மத்திய மாகாண நகரங்களில் குறுகியகாலத்தில் அபிவிருத்தியடைந்த நகரமாக திகழ்கின்ற நாவலப்பிட்டி நகரில் மேலும் பல அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி நகரசபையின் தலைவர் நிசாந்த ரணசிங்ஹ தெரிவித்தார்.

நாவலப்பிட்டி நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் 2013ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் 2013ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் நாவலப்பிட்டி நகரசபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'நாவலப்பிட்டி நகரசபையால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் குறித்தும் இந்த அபிவிருத்தித்திட்டங்களால் பிரதேச மக்கள் அனுபவிக்கின்ற நன்மைகள் குறித்தும் ஏனைய பிரதேசங்களின் மக்கள் பாராட்டுத் தெரிவிக்கின்றனர். இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் ஆலோசனையும் எமது உறுப்பினர்கள் உட்பட பிரதேச மக்களின் ஒத்துழைப்புமே காரணமாகும். இவ்வாறான ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் எதிர்பார்க்கின்றேன்.

2013ஆம் ஆண்டில் நாம் மேலும் பல அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். நகரசபையின் சுகாதார சுத்திகரிப்பாளர்களுக்கு நவீன முறையிலான குடியிருப்புத்திட்டமொன்று இம்புல்பிட்டிய தோட்டத்தில் அமைத்துக்கொடுக்கவுள்ளோம். பௌத்த மண்டபம் புதிய வாடிவீடு, பழைய நகரசபைக் கட்டிடத்தில்  நவீன மண்டபம், வியாபாரக் கட்டித்தொகுதி என்பனவற்றையும் அமைக்கவுள்ளோம்.

மழைக்காலத்தில் நாவலப்பிட்டி கம்பளை வீதியில் நீர் தேங்கி நிற்பதால் ஏற்படுகின்ற பாதிப்பை முற்றாக இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கு பௌசர் ஒன்றை கொள்வனவு செய்யவுள்ளோம். தற்போது பழுதடைந்துள்ள பாதைகளை மீண்டும் சீரமைக்கவுள்ளோம்.

எமது நாட்டில் சிறந்த விளையாட்டு மைதானமாக கருதப்படுகின்ற நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் பாகிஸ்தான், பங்களாதேஷ்,  இலங்கை ஆகிய நாடுகளின் தேசிய கால்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சுற்றுப்போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. இதன்போது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் நாவலப்பிட்டி நகருக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நகரின் வர்த்தகர்கள் மேலும் நன்மையடைவர்' என்றார்.

இந்தக் கூட்டத்தில் நகரசபை உறுப்பினர்கள், நகர வர்த்தகர்கள், அரநிறுவனங்களின் அதிகாரிகள், அபிவிருத்திச் சங்கங்களின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .