2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

பல்லேகல பெருந்தோட்ட காணிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை : வேலுகுமார்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு தற்போது முறையான பாவனையின்றிக் காணப்படும் பல்லேகலைப் பெருந்தோட்டப் பகுதி காணிகளை பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரநிதித்துவம் இல்லாத குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கண்டி, பலகொல்லையில் புதன்கிழமை(12) நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பல்லேகலை, அம்பக்கோட்டை, அலுத்வத்தை, மாபேரிதென்னை போன்ற இடங்களில் பரம்பரையாக வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் இந்திய வம்சாவழிப் பெருந்தோட்ட மக்களாவர்' என்றார்

பல்லேகலை பெருந்தோட்டம் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், தற்போது அதன் சில பகுதிகள் தரிசாக உள்ளதுடன் முறையான பாவனைக்கு உட்;படுத்தப்படாது காணப்படுகிறது.

இப்பிரதேசத்தில் காணியற்று வாழும் தமிழ் மக்களுக்கு இவற்றைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.  குறிப்பாக குண்டசாலைத் தொகுதியைச் சேர்ந்த திகனை மற்றும் பலகொல்ல பிரதேசங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்;.

இங்கு முக்கிய தோட்டங்களில் ஒன்றான பல்லேகலைத் தோட்டம் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட தெல்தெனிய பிரதேச மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதனால் இத்தோட்டம் சிறிய கிராமங்களாக மாறியது.
இதன் விளைவாக பல்லேகலை, அம்பகோட்டை, அலுத்வத்தை, நித்துலேமட என தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் உருவாகின.

ஆனால், இக்கிராமங்களில் சிலருக்கு பல வருடங்களுக்கு முன்பே காணி வழங்கப்பட்ட போதும் அதற்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கப்படவில்லை.
இன்னும் லயன் அறைகளில் வாழும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

'கடந்து 15 வருடங்களாக கண்டி மாவட்டத்துக்கு தமிழ் பிரதிநிதி ஒருவர் இல்லாத காரணத்தால் இதனைத் தட்டிக் கேட்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது. புதிய நாடாளுமன்றில் காணி அற்ற பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட உள்ளது. அதன்கீழ் இப்பகுதியில் காணி இல்லாதவர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்' என அவர் கூறினர்.

 

 

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .