2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பிரதமர் ரணில் தமிழர்களின் முதுகில் குத்துக்கின்றார்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி. ஷங்கீதன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான கே.வேலாயுதத்தின் பெயரை தேசியப்பட்டியிலிருந்து நீக்கி, மலையக தமிழர்களின் முதுகில் குத்திவிட்டார் என மலையக புத்தி ஜீவிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது,

'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழர்களின் நெஞ்சில் குத்தினார். ஆனால், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் முதுகில் குத்தியுள்ளார்.

' ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் பதுளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கே.வேலாயுதத்தின்; பெயர் நீக்கப்பட்டுள்ளது.  ஆனால், நாடாளுமன்ற தேர்தலின்போது,  ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தேசிய பட்டியலில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

மலையக சிறுபான்மையின மக்களுக்கு திட்டமிட்ட அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி, துரோகமிழைத்துள்ளது.

'கடந்த பல வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியுடன்  இணைந்து செயற்பட்டு வரும் கே.வேலாயுதம், பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த நிலையிலும், கட்சி மாறாமல் தான் ஒரே கட்சியில் இறுதிவரை இருக்க வேண்டும் என்று,  உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்' என்று கூறினர்.   

ஐ.தே.க.வில் பல பதவிகளை வகித்திருந்தாலும்கூட, தேசிய பட்டியலில் இதுவரை இடம்பெற்றதில்லை. இம்முறை தேசிய பட்டியலில் ஐ.தே.க வேலாயுதத்துக்கு சந்தர்ப்பம் வழங்குமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந்த எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியாகிவிட்டது.

எனினும், இ.தொ.க லிருந்து வெளியேறி ஐ.தே.க.வில் இணைந்துக் கொண்ட யோகராஜாவுக்கு ஐ.தே.க கடந்த முறை தேசியப்பட்டியல் ஊடாக நியமனம் வழங்கியிருந்தது.

ஆனால், யோகராஜன் இந்த முறை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

'இந்தத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வேலாயுதத்தை போட்டியிட வேண்டாமென்றும் அவருக்கு தேசிய பட்டியலில் சந்தர்ப்பத்தை வழங்குவதாகவும் ஐ.தே.க அறிவித்திருந்தது.  அதன்படி பத்திரிகையின் வாயிலாக ஐ.தே.க.வின் தேசியப்பட்டியலில் 4ஆவது இடத்தில் வேலாயுதத்தின் பெயரும் குறிப்பிடப்படிருந்தது.

இதன்மூலம் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு  தெரிவு செய்யப்படும் அவருக்கு, இராஜாங்க அமைச்சு கிடைக்குமென்ற நோக்கில் மலையக மக்கள், ஐ.தே.க வுக்கு அநேகமான வாக்குகளை வழங்கினர்.

நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பகுதிகளிலே சிறுபான்மை மக்களின் வாக்குகளால் ஐ.தே.க வெற்றி பெற்றது. ஆனால், வெற்றி பெற்ற ஒரு சில தினங்களிலே ஐ.தே.க.வின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, தனது முகத்திரையை காட்ட ஆரம்பித்துவிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற இச்சூழலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமது கொள்கைகளை மிகவும் கவனமாகவும் கோரிக்கைகளை மிகவும் நுணுக்கமாகவும் கையாள வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.

வெற்றிக்கு முக்கிய பங்காளியாக இருந்த மலையக தமிழ் சிறுபான்மை மக்களை மறந்துவிட்டு, ஐ.தே.க செயற்பட்டு கொண்டிருக்கின்றமையானது, மலையக புத்திஜீவகளுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .