2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

’ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தயாராகவும்’

Editorial   / 2019 நவம்பர் 01 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

கொழும்பில் வாழ்கின்ற மலையக இளைஞர், யுவதிகள், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்குத் தயாராக வேண்டும் என்று, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிஷ்ணன் தெரிவித்தார்.

அதேபோன்று கொழும்பில் வாழ்கின்ற மலையக இளைஞர், யுவதிகளுக்கு உரிய வகையில் விடுமுறை வழங்கி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு, கொழும்பு வாழ் வர்த்தகர்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்யுமுகமாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி, கொழும்பு வர்த்தகர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு, கொழும்பு தாஜ்சமுத்ரா விருந்தகத்தில், நேற்று (31)  நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், கொழும்பு வர்த்தக பெருமக்கள் வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுகூர்வதாகவும் தெரிவித்தார்.

ஒருசில வர்த்தகர்கள், தங்களுடைய வியாபார நிலையங்களை மூடாமல் வியாபாரத்தைக் கருத்திற் கொண்டு மாத்திரம் செயற்படுவதாகவும் இரண்டு நாள் வர்த்தகத்தை விடவும் ஐந்து வருடங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே, மிகவும் முக்கியமானது என்றும் எனவே, வர்த்தக நிலையங்களில் தொழில்புரிய இளைஞர், யுவதிகளுக்கு உரிய விடுமறை வழங்குவதற்கு, வர்த்தகர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் இளைஞர், யுவதிகள், கொழும்பிலே இருந்து விடாது, தத்தம் ஊர்களுக்குச் சென்று, ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .