2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தலவாக்கலை ஆர்ப்பாட்டத்துக்கு ’த.தே.கூ ஆதரவு’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், தலவாக்கலையில் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ் அரசியல் கட்சிகளினதும் தொழிற்சங்கங்களினதும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, லங்கா சமசமாஜக் கட்சி, மக்கள் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தரப்புகளே, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில், எதிர்வரும் 23ஆம் திகதி, குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

கடந்த காலங்களைப் போல், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படாமல், வாழ்க்கைச் சுமையைச் சமாளித்து, கௌரவமான முறையில் வாழ்வதற்கான ஏற்பாடுகள், இம்முறை கைசாத்திடப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே, குறித்த போராட்டம் இட​ம்பெறவுள்ளது.

இந்நிலையில், கைச்சாத்திடப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், மலையக அபிவிருத்தி மட்டுமல்லாது, அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளதென்றும், கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தலவாக்கலைப் போராட்டத்துக்கு, தமது தொழிற்சங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ள லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அந்தப் போராட்டத்தில் தமது தொழிற்சங்கமும் கலந்துகொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாகத் தாம் செயற்படுகின்ற வேளையில், அரசாங்கத்துடன் தமக்கு முரண்பாடுகள் இருக்கின்றபோதிலும், பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வுக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு, முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .