2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

தொழில்வாய்ப்புகளுக்காக மலையகத்தில் இந்தியா கூடுதல் முதலீடு

Kogilavani   / 2021 மார்ச் 05 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உமாமகேஸ்வரி

இலங்கையில் மாவட்ட ரீதியாக குறிப்பாக மலையகத்தில் கூடுதலான முதலீடுகளைசெய்து அதன்மூலம் மலையக இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக, இலங்கைக்கான இந்திய கண்டி உதவிஸ்தானிகர் ஜே.ராக்கேஸ் நட்ராஜ் தெரிவித்தார்.

இரத்தினபுரி சென்சூரியா சுற்றுலா உணவகத்தில் இரத்தினபுரி மாவட்ட தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் புத்திஜீவிகளை, நேற்று (4) சந்தித்து உரையாற்றியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் முதலீடுகள் செய்வது குறித்து களநிலையை அறியும்பொருட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு அன்றைய தினம் விஜயம்செய்து பௌத்த, இந்துமத தலைவர்கள் சப்ரகமுவ ஆளுநர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து தகவலறிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'இலங்கையில் மலையகப் பகுதி என்றால் கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்கள் உள்ளிட்ட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களையே எமக்கு காட்டுகின்றனர். ஆனால், சப்ரகமுவ, தென்மாகாணங்களிலும் இந்திய வம்சாவழி மக்கள் வாழ்கின்றனர் என்று அறிந்து நாம்  தற்போது இப்பகுதிகளுக்கு களப்பயணம் மேற்கொண்டு வருகின்றோம்.

'இரத்தினப்புரி மாவட்டத்தில், தொழில்வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், இதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிவழங்க வேண்டும். எந்தத் துறையில் முதலீடு செய்தால் உங்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறீர்கள். அதுமட்டுமல்லாமல் தொழில்வாய்ப்புக்கு முன்னர் தொழில்பயிற்சி மிகமிக அவசியமாகும். அதற்கான நடவடிக்கைளை நாம் மேற்கொள்கின்றோம்.

குறிப்பாக மலையக மக்களின் பிள்ளைகளின் தமிழ்மொழியில் தனியான தொழில்பயிற்சி நிலையம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
'மேலும் தோட்ட ரீதியாக மாடு வளர்ப்புகளை ஊக்குவிக்கலாம். இதற்கு இந்திய முதலீட்டளர்கள் தயாராகவே உள்ளனர். அத்துடன் இந்தியாவில் தற்போது முன்னனியிலுள்ள பால் உற்பத்தி நிறுவனங்கள், ஆரம்பத்தில் கூட்டுறவு சங்கங்களினூடாக மாடு வளர்ப்பை ஊக்குவித்து பால் உற்பத்தியை அதிகரித்து தற்போது பாரிய நிறுவனமாக அவைகள் வளர்ந்துள்;ளன. அதேநிறுவனங்களை இங்கேயும் முதலீடு செய்து இதேபோன்று கூட்டுறவு சங்கங்கள் அமைத்து பால் உற்பத்தியை அதிகரிக்கலாம். இந்தத் திட்டங்கள்மூலம் பெரும்பாலானவர்கள் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள் முடியும்.

'இரத்தினபுரி மாவட்டத்தில் பாரத கலையான பரத நாட்டியத்தை வளர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இம்மாவட்ட பாடசாலைகளிலும் பரத நாட்டியத்தை கற்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும்பட்சத்தில் அதற்கான உதவிகள் செய்து தரப்படும்.

'இந்திய அரசாங்கம் வருடந்தோறும் இலங்கை மாணவர்களுக்கு குறிப்பாக பெருந்தோட்ட மாணவர்களுக்கு பல்வேறு புலமைப்பரிசில் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. ஆனால், அதற்குக்கூட இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட மாணவர்கள் விண்ணப்பிப்பதில்லை. அத்துடன் இம்மாவட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள்  எவரும் இல்லை. இதனால் இம்மாவட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகள் எம்மி;டம் வந்து சேருவதுமில்லை. இனி நாங்கள் நேரடியாக வந்து  தேவைகள் என்னவென்று அறிந்து  அதனை நிறைவேற்ற  முயற்சி செய்கின்றோம்.
'இலங்கையிலுள்ள ஆசிரியர்களுக்கு இந்தியாவில் மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்தியா, இலங்கையிலுள்ள மலையக மக்களை எக்காரணம் என்றுமே கைவிடாது என்று உறுதிபடக்கூறுகின்றோம்' என்றும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .