2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

‘நுவரெலியா மாநகர சபையின் செயற்பாடுகளில் திருப்தியில்லை’

டி. ஷங்கீதன்   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாநகரசபையின் செயற்பாடுகள் திருப்தியில்லை என்றும் மாநகரசபை, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயற்படுவதையே, ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் சட்டதரணி லலித் யூ. கமகே தெரிவித்தார்.  

இதேவேளை, நுவரெலியா மாநகர சபையிலும் நுவரெலியா பிரதேச சபையிலும் நிலவிவரும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

மாநகர சபை, பிரதேச சபை ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறியும் கூட்டம். நுவரெலியா மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் நுவரெலியாவின் பஸ் தரிப்பிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் பயணிகள் அமர்வதற்கு, அங்கு கதிரைகள் இல்லை என்றும் அவர் கூறினார்.  

வாவி நீர் அனைத்தும் அசுத்தமாகவே காணப்படுவதாகவும் நகரின் கழிவு நீர் வாவிக்குச் செல்வதைத் தடுக்க மாற்றுவழி ​செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.  

பஸ் தரிப்பிடத்தில் உள்ள கடைகளிடமிருந்து மாதாந்தக் கூலி வசூலிக்கப்பட்டு வருகின்றமையால், அங்குள்ள குறைபாடுகள் தீர்த்து வைக்கப்படல் வேண்டும் என்றும் அதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  

இதேவேளை, சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதற்கு, நுவரெலியாவில் விமானநிலையம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

அத்துடன், நுவரெலியாவில் கட்டடங்கள் அமைப்பதில் பிரச்சினைகள் காணப்படுவதாக பலர் முறையிட்டிருந்ததாகவும் எனவே கட்டடங்கள் அமைக்கும் போது, கடுமையான சட்டத்தைப் பயன்படுத்தாமல், மக்களின் தேவைக்கு ஏற்ப சாதாரண சட்டத்தைப் பயன்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.  

மாநகரசபைக்குள்ள அதிகாரத்தை, சர்வாதிகார முறையில் பயன்படுத்தாமல், ஜனநாயக முறையில் பயன்படுத்துமாறும் அதையே, ஜனாதிபதி விரும்புவதாகவும் அவர் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .