‘மண்டியிட சொல்லவில்லை’

எம்.செல்வராஜா

“பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கேட்குமாறு நான் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் எவ்வித உண்மையும் இல்லை” என்று, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.   

ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,   

“தேர்தல் காலம் என்பதால், எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்தே, மாகாண அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றேன்.

அதேபோன்று, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, வித்தியாலய அதிபர், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரையும் பிரச்சினைக்குரிய பெற்றோரையும் அழைத்து, கலந்துரையாடல்களை மேற்கொண்டேன்.   

“இந்தக் கலந்துரையாடல் சுமூகமான முறையிலேயே நடத்தப்பட்டது. எந்தவோர் உத்தரவும் வித்தியாலய அதிபருக்கு விடுக்கப்படவில்லை. வித்தியாலய நடைமுறைகளைப் பின்பற்றும்படியும் அதிபரிடம் கேட்டுக்கொண்டேன். அதிபரும் அதற்கு இணக்கம் காட்டினார். அதையடுத்து, அதிபர் புத்தாண்டு வாழ்த்துகளையும் கூறிவிட்டுச் சென்றார்.   

“இதனை ஜே.வி.பியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன உள்ளிட்ட சிலர், அரசியல் இலாபம் தேடிக்கொள்ளும் வகையில், முழங்காலிட்டு மன்னிப்புக் கோருமாறு முதலமைச்சர், அதிபரை கூறியதாக செய்திகளைப் பரப்பி விட்டுள்ளனர். இது விடயத்தில் உண்மை ஏதும் இல்லை.   

“ஆனால், பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி, ஊவா மாகாண சபையின் தமிழ் உறுப்பினர்கள் அனைவருமே எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். அதிபரை இடமாற்றுவதற்கு, நான் தீர்மானிக்கவில்லை. அதிபர் தரமுள்ளவர்களின் பற்றாக்குறையால், புதிய அதிபரொருவரை இவ்வித்தியாலயத்துக்கு நியமிப்பதில் இடையூறுகள் உள்ளன.   

“வித்தியாலய அதிபரை முழங்காலிட்டு, நான் மன்னிப்பு கோரியதாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக, ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி உறுப்பினர் சமந்த வித்யாரட்னவுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளேன்” என்றார்.   

இவ்விடயம் தொடர்பில், பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியுடன் தொடர்புகொண்டு வினவிய போது,   

“முதலமைச்சர், என்னிடம் மன்னிப்புக் கோருமாறு கோரவில்லை. முழங்காலிடுமாறு கூறவும் இல்லை. முதலமைச்சருடன் சுமூக பேச்சுவார்த்தையொன்றையே குறிப்பிட்ட தினத்தில் மேற்கொண்டோம். எமது வித்தியாலய அபிவிருத்திக்கு, முதலமைச்சர் ஆகக் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். முதலமைச்சருக்கும் எனக்கும் எத்தகைய பிரச்சினையும் இல்லை. நல்லுறவுகளே தொடர்கின்றன” என்று கூறினார். 


‘மண்டியிட சொல்லவில்லை’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.