2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

முக்கியஸ்தர்களை ஆஜராகுமாறு பணிப்பு

Gavitha   / 2021 ஜனவரி 25 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை, பார்க் தோட்ட விவகாரம் தொடர்பில், நுவரெலியா பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் இராஜாங்க அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொணடமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று, இன்று (25) நடைபெற்றது.

குறித்தத் தோட்டத்தில், கடந்த வாரம் தோட்ட நிர்வாக உயரதிகாரிக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து, 11 பேர் கைது செய்யப்பட்டு, மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கைளயும் கைது செய்ய, நீதிமன்றம் ஊடாக, பிடியாணைப் பெறப்பட்டு, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையிலேயே. நேற்று நுவரெலியா இ.தொ.கா பிராந்திய காரியாலயத்தில் தோட்ட தலைவர்கள், தலைவிமார்கள் சம்பவத்துடன் தொடர்புபட்ட பொதுமக்கள் என பலரையும், இராஜாங்க அமைச்சர் சந்தித்திருந்தார்.

இந்நிலையில், இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களை, திங்கட்கிழமை (25), நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் படியும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய நபர்களை, இனி பொலிஸார் வீடு வீடாகச் சென்று தேடுவதை நிறுத்திக்கொள்ளுமாறும், நுவரெலியா மாவட்ட பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் எ.கே.சந்தன அத்துகொரளவுக்கு, இராஜாங்க அமைச்சர் பணிப்புரைவிடுத்தார்.

அதேநேரத்தில் கைது செய்ய  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ரமேஸ்வரன் உள்பட நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ராமஜெயம் ஆகியோர்  நுவரெலியா பொலிசாருடன் நீதிமன்றதுதில் ஆஜராகவுள்ளனர்.

உதவி தோட்ட அதிகாரி ஒருவர்  தாக்கப்பட்ட சம்பவத்தை உள்ளடக்கி  தோட்ட அதிகாரியின் விடுதிக்கு சேதம் விளைவித்தமை, கொரோனா சட்டவிதிகளை மீறி பொதுமக்களை ஒன்றுத்திரட்டியமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களைப் உள்ளடக்கி,  இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .