2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மக்களுக்கு பணியாற்றுவதற்கு அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கவேண்டியதில்லை : மனோ கணேசன்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மக்களுக்கு பணியாற்றுவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளை தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபடியே மக்களுக்கு பணியாற்றலாம் என்பதற்கு இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் குமரோதய தமிழ் வித்தியாலயம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.


 கொழும்பு கிழக்கு கிருலப்பனையில் மேல்மாகாணசபை உறுப்பினரும், முன்னணியின் பொதுச்செயலாளருமான கலாநிதி ந.குமரகுருபரன் முயற்சியினால் கூட்டிணைக்கப்பட்டு மேல்மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பிலவினால் திறந்து வைக்கப்பட்ட குமரோதய தமிழ் வித்தியாலய நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன்

இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

எனது நண்பர் அமைச்சர் உதய கம்மன்பில மேல் மாகாணத்தை ஆளுகின்ற ஒரு அமைச்சராவார்;. மேலும் அவர் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும் ஆவார். எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் குமரகுருபரன் மாகாணசபையில் எதிரணியை சார்ந்த ஒரு உறுப்பினரவார்;. எங்களது கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத ஒரு உறுதியான எதிர்க்கட்சியாகும். அரசியல் ரீதியாக வௌ;வேறு நிலைப்பாடுகளில் இருந்தாலும் மக்கள் பணியாற்றுவதற்காக இன்று புரிந்துணர்வுடன் செயற்பட்டுள்ள கம்மன்பில, குமரகுருபரன் ஆகிய இருவரையும் நான் பாராட்டுகின்றேன். அரசாங்கத்திற்கு வந்தால்தான் ஒத்துழைப்பேன் என்று அமைச்சர் சொல்லவில்லை. தனித்துவத்தைவிட்டு விட்டு குமரகுருபரனும் செயற்படவில்லை. பொது தேவைக்காக இருவரும் இணைந்து செயற்பட்டுள்ளது இந்த கொழும்பு மாவட்டத்திற்கே ஒரு முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றது.
 
தனித் தமிழ் பாடசாலை என்பது வேறு. பன்மொழி பாடசாலையின் தமிழ் மொழி பிரிவு என்பது வேறு. நாராஹென்பிடியவில் அமைந்திருந்த மஹாவத்தை தமிழ் பாடசாலை தனியான ஒரு பாடசாலையாகும். இந்த தனித் தமிழ் மொழிமூல பாடசாலை இன்னொரு பாடசாலையின் தமிழ் பிரிவாக மாற்றப்படவிருந்தது. இந்த அபாயத்தையே இன்று குமரகுருபரன் தடுத்து நிறுத்தியுள்ளார். இன்று இப்பாடசாலையின் தனித்துவம் பாதுகாக்கப்பட்டு தனியான ஒரு கட்டிடத்திலே இந்த புதிய பாடசாலை கூட்டிணைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.


அதேவேளையில் இந்த கட்டிடத்தில் இயங்கிவந்த சிங்கள பாடசாலை பராக்கிரம, சுஜாதா ஆகிய பாடசாலைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு புதிய பாடசாலையாக உருவாகின்றது. இது தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகள் மூலமும் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் நடைமுறை சாத்தியமான தீர்வாக அமைந்திருக்கின்றது.  
 
அமைச்சர் கம்மன்பில தனது உரையில் யுத்தம் நடைபெற்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்த இன்றைய யுகத்திலே தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுதருவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். யுத்தம் நிகழ்த்தப்பட்ட முறைமை குறித்து நான் மகிழ்ச்சியடைய முடியாது. ஆனால் யுத்தம் நிறைவு பெற்றதை நினைத்து நானும் மகிழ்ச்சி அடைகின்றேன். யுத்தத்தின்போது நிகழ்ந்த துன்பங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு கடந்தகாலத்திலேயே வாழும்படி தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் சொல்வதில்லை. எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டும். தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான விடைகளை நாங்கள் இராமாயண இலங்கையில்; தேடமுடியாது. சிங்கள அரசியல்வாதிகளும் இன்றைய பிரச்சினைகளுக்கான விடைகளை மகாவம்சத்தில் தேடக்கூடாது. இந்த புரிந்துணர்வு இருக்குமானால் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள்ளே தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒரே நாட்டு மக்களாக வாழுகின்ற சூழலை நாங்கள் உருவாக்கலாம். இத்தகைய சோரம்போகாத தனித்துவத்துடனும், அதேவேளையில் பெரும்பான்மை அரசியல்வாதிகளுடனான புரிந்துணர்வுடனுமே நாங்கள் செயற்படுகின்றோம்.  
 
இன்று எம்மால் தனிநாயகம் அடிகளார் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள கொழும்பு வணாத்தமுல்லை தமிழ் பாடசாலையின் மைதானம் பக்கத்தில் அமைந்துள்ள விமானப்படை முகாமினால் கையகப்படுத்தப்படும் அபாயம் அன்று ஏற்பட்டது. அவ்வேளையில் மாகாணசபை உறுப்பினராக இருந்த நான் அதை தடுத்து நிறுத்தியிருந்தேன். பின்னாளில் நாடாளுமன்றம் சென்ற பிறகு மத்திய கொழும்பு இந்து வித்தியாலயத்தையும், கணபதி இந்து மகளிர் வித்தியாலயத்தையும் அடிப்படை மாற்றங்களுடன்கூடிய தூரநோக்குடன் உருவாக்கியிருந்தேன்.


அவ்வேளையில் பிரபலமாகியிருந்த நவோதயா உலக வங்கி திட்டத்திலே கொழும்பு வலய தமிழ் பாடசாலைகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இந்த அநீதியை துடைத்தெறிந்து தெமட்டகொடை விபுலானந்தா, கொட்டாஞ்சேனை நல்;லாயன் வித்தியாலயங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவந்தேன். பாமன்கடையில் அமைந்துள்ள வெள்ளவத்தை தமிழ் பாடசாலை கட்டிடத்தில் காலை, மாலை என இரண்டு பாடசாலைகள் இயங்கிவந்த அலங்கோலத்தை மாற்றி அங்கு இராமகிருஷ்ண தமிழ் வித்தியாலயத்தை உருவாக்கினேன். இப்படியே நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.


இதில் முக்கியமானது என்னவென்றால், இவை அனைத்தையும் நான் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே செய்ததாகும். தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல் நான் எனது முயற்சிகளை உறுதியுடன் முன்னெடுத்ததால், எனது நன்முயற்சிகளை புரிந்துகொண்டு ஆளுங்கட்சியில் இருந்த பெரும்பான்மையின அரசியல்வாதிகளும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். கொழும்பு வலயத்தின் தமிழ் பிரதி கல்வி பணிப்பாளரும், சம்பந்தப்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் என்னுடன் ஒத்துழைத்தார்கள். இவர்களது ஒத்துழைப்புகள் இல்லாவிட்டால் எனக்கு இந்த பணிகளை ஆற்றியிருக்கவே முடியாது. இதனால்தான் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய கொழும்பு தமிழ் கல்வி சமூகம் என்னை மறக்காமல் இருக்கின்றது. இன்றும் இந்த பாரம்பரியத்தின்; தொடர்ச்சியாக குமரகுருபரன் கொழும்பு மாவட்ட தமிழ் கல்வி வளர்ச்சியை முன்னெடுக்கின்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .