2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஐ.ம.சு.கூ.வை ஜனாதிபதி பலிவாங்குகிறார்: மஹிந்த

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக்கொண்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரை பலிவாங்குகிறார்; என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் வெள்ளிக்கிழமை  (7) மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்; தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த ஜனாதிபதி தேர்தலில்; வடக்கு கிழக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் போதே எனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினேன். இன்று சிலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவியுள்ளனர். அவர்கள் அந்தக் கட்சியுடன் இணைந்துக் கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப் போவதாக கூறுகின்றனர். தேசிய அரசாங்கம் அல்ல ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கமே உருவாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலிவாங்கும் படலத்தையே மேற்கொண்டுள்ளார். அதற்கு நாங்கள் முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இன்று அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 15இலட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். மேசன் வேலை செய்பவர்கள் முதல் இன்ஜினியர்கள் வரை தொழில் இழந்துள்ளனர்.

எனவே, நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தலின் பின்னர் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.   எமது ஆட்சியில் அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச வேதனம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். தனியார் துறை ஊழியர்களுக்கு  மூவாயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

இன்று எனக்கெதிராக போலிப் பிரசாரம் செய்யப்படுகிறது. என்னையே அவர்கள் குறிவைத்துள்ளனர். என்மேல் உள்ள பயமே இதற்குக் காரணமாகும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .