2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

மாணவிகள் இருவருக்கு அறைகளை வழங்கிய விடுதி உரிமையாளர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

பாடசாலை மாணவிகள் இருவர்  தமது காதலர்களுடன் தங்குவதற்கு அறைகளை வழங்கிய விடுதி உரிமையாளரை   இன்று (04) கைது செய்துள்ளதாக,  நீர்கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஹெந்தளை, வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய வர்ணகுலசூரிய டெரன் லலித் என்பவராவார்.

சந்தேகநபர் அனுமதிப்பத்திரமின்றி அறைகளை வாடகைக்கு வழங்கியமை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தமது விடுதியில் அறைகளை வாடகைக்கு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பிட்டிபனை பிரதேசத்தைச் சேர்ந்த  சிங்கள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய  மாணவிகள் இருவர், பாடசாலைக்குச் செல்லாமல் பாடசாலை சீருடையில்  தமது காதலர்களுடன் இன்று  பிட்டிபனையில் உள்ள குறித்த விடுதிக்குச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக, 119 அவசர பொலிஸ் இலக்கத்துக்குக் கிடைத்த தகவல் ஒன்றறை அடுத்து  அந்த விடுதிக்குச் சென்ற பொலிஸார், மாணவிகள் இருவரையும் அவர்களது காதலர்கள் இருவரையும் விடுதி உரிமையாளரையும் கைதுசெய்தனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மாணவிகள் இருவரும் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களது காதலர்கள் இருவரும் 22 வயதுடையவர்களாவர்.

சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி. லக்மாலியின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மாணவிகள் இருவரதும் பெற்றோர்கள்,  விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதி உரிமையாளரின் கெப் ரக வாகனமும் இளைஞர்கள் இருவரும் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும், பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X