2020 ஜூன் 01, திங்கட்கிழமை

‘வாழ்க்கை சிறப்பாக அமையும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எம்மைப் பற்றியும் சூழலைப் பற்றியும் எமது அரசியல் நிலைமை பற்றியும் அறிந்து கொண்டால் மட்டுமே எமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“பரிசளிப்பு விழா என்பது பாடசாலைகள் தோறும் நடாத்தப்பட வேண்டிய முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வில் ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் பரிசில்களைப் பெறத் தவறிய மாணவிகளும் மற்றும் பரிசில் பெறாத மாணவிகளும் இருக்கக்கூடும். அவர்களுக்கு அடுத்த முறை தமது பெயர்களும் பரிசில்கள் பெறும் மாணவிகளின் பெயர்ப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அவ்வாறெனில் இன்றைய நிகழ்வானது, கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனஞ் செலுத்தக்கூடிய ஓர் உந்துசக்தியை அவர்களுக்கு வழங்குமென்று எதிர்பார்க்கின்றேன்.  

“பாடசாலைப் பருவம் என்பது மனித வாழ்வின் மிகவும் மகிழ்ச்சிகரமான காலப்பகுதியாகும். இப்பருவத்தில் மட்டுமே மற்றைய எந்தக் கவலைகளுமின்றி நண்பர், நண்பிகளுடன் கூடிக் குதூகலம் செய்து எமது அன்புக்குரிய ஆசிரியர்களைக் கலாய்த்து அதே நேரத்தில் அவர்களின் வழிகாட்டல்களில் எமது கல்வி நடவடிக்கைகளைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு காலம்.  

“நாம் தினமும் பாடசாலைக்குப் புறப்படுகின்ற போது உடைகளை அணிந்து கண்ணாடிக்கு முன்நின்று எமது உடைகள் சீராக இருக்கின்றனவா? முகம் அழகாக இருக்கின்றதா? நெற்றியில் பொட்டு இருக்கின்றதா? என்ற அனைத்தையும் மறுபரிசீலனை செய்கின்றோம். அதேபோன்று எமது பாடசாலைப் புத்தகப் பையில் அன்றைய பாடங்களுக்குரிய புத்தகங்கள் நேரசூசிகையின் படி ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளனவா? சிற்றுண்டிப் பொதி வைக்கப்பட்டுள்ளதா? என அனைத்தையும் மறுபரிசீலனை செய்கின்றோம். ஆனால் அதே போல் நாம் என்றாவது எமது கல்விச் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்திருக்கின்றோமா என்று கேட்டால் பொதுவாக அதற்கு விடை நேர்மறையாகவே இருக்கும். நீங்கள் தினமும் பாடசாலைக்குச் செல்ல முன்பு முதல் நாள் பாடங்கள் மீளவும் பரிசீலிக்கப்பட்டதா? பாடசாலையில் தரப்பட்ட வீட்டு வேலைகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளனவா? நேற்றைய பாடங்களில் ஏதாவது விளக்கமற்ற பகுதிகள் காணப்படுகின்றனவா? போன்ற விவரங்களை நாம் மீளப் பரிசீலிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.  

“கல்வி என்பது வேப்பங்காயாக இல்லாமல் தேனாக இனிக்க வேண்டுமானால் இவ்வாறான மறு பரிசீலனை எமக்கு ஒரு தன்னம்பிக்கையை ஊட்டும். அந்தத் தன்னம்பிக்கை மகிழ்வைத்தரும். ஒரு நல்ல மாணவிக்கும் மற்றையவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் நல்ல மாணவி வரமுன் காப்பது போல் கேள்விகள் கேட்கப்பட முன் அந்தப் பாடத்தில் அறிவை ஏற்கெனவே பெற்றிருப்பார். இந்தப் பரீட்சயம் நாளாந்த மறு பரிசீலனையால்தான் ஏற்பட முடியும்.  

“எனவே, பாடங்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். அதே நேரம் எமது நாளாந்த வாழ்க்கையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.அடுத்து, பிழையில்லாமல் எழுதப் பேசப் பழகிக்கொள்ள வேண்டும். மேலும், மொழிக்கல்வியில் நீங்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். எம்மெல்லோரையும் பிணைப்பது எமது மொழியே. அந்த மொழியில் பாண்டித்தியம் அடைவது இன்றியமையாதது. அதே போன்று கணிதம், விஞ்ஞானம், புவியியல், வரலாறு போன்ற பாடங்களிலும் நீங்கள் கூடிய கவனம் செலுத்துவதன் மூலமே உலகைப் பற்றியும் எம்மைப் பற்றியும் எமது சூழலைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் வைத்தியராக அல்லது பொறியியலாளராக அல்லது சட்டத்தரணியாக அல்லது ஆசிரியராக ஏதோ ஒன்றாக வர முடியும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X