2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

அம்பியூலன்ஸ் சேவை நடத்த வடமாகாண சபைக்கு முடியுமானால் மத்திய அரசாங்கத்தால் ஏன் முடியாது?

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

வடக்கு மாகாண சபையால் அம்பியூலன்ஸ் சேவையை நடத்த முடியுமென்றால், மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறானதொரு சேவையை வழங்க ஏன் முடியாது?' என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே, கேள்வி  எழுப்பினார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,

'வட மாகாணத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் அவசர நோயாளர் காவுவண்டி சேவை சிறப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, வடக்கில் அவ்வாறானதொரு சேவையை  மேற்கொள்ள முடியும் என்றால், ஏன் மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறு மேற்கொள்ள முடியாது?

அதற்கு நோயாளர் காவுவண்டி இல்லை என்றால் இந்தியாவிலிருந்து நோயாளர் காவுவண்டியை   பெற்றுக்கொள்ளலாம். அல்லது கடனாக நிதியைப் பெற்று குறித்த சேவையினை ஆரம்பிக்க முடியும்.

அதனை விடுத்து, இந்திய நிறுவனம் ஒன்றுக்கு சேவையினை வழங்கி, அதனை இலங்கையில் செயற்பட அனுமதிப்பது ஏற்புடையது அல்ல. எனவே இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

முன்னைய அரசாங்கம், சீபா எனும் பெயரில் இவ்வொப்பந்தத்தைக் கொண்டு வந்தது. ஆனால், நாட்டில் அதற்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

அத்தோடு, அப்போது எதிர்கட்சியாக இருந்த தற்போதைய ஆளும் கட்சி அரசாங்கம், அன்று சீபாவுக்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. ஆனால் இன்று, அதே ஒப்பந்தத்தை எக்டாவாக கொண்டு வருகின்றது.

இது இலங்கையின் மருத்துவத் துறைக்கு மாத்திரமன்றி  தொழிநுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது.

முக்கியமாக, எக்டா மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள அவசர நோயாளர்  காவுவண்டி சேவையின் மூலம், இந்தியாவிலிருந்து  மருத்துவர்கள், தாதியர்கள், மற்றும் அனைத்து ஊழியர்களும்  இலங்கைக்கு வந்து பணியாற்றுவார்கள். இது இலங்கையின் வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--