2021 மே 06, வியாழக்கிழமை

எமது தனித்துவம் எமக்கு தேவை: கனேடிய அமைச்சரிடம் சி.வி தெரிவிப்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 29 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தமிழர்களாகிய எமது தனித்துவம் எமக்கு தேவை. அதையே நாம் கோருகிறோம். மாறாக நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தான் எடுத்துரைத்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன், இன்று வெள்ளிக்கிழமை (29), வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகவியலாளருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய தினம் கனடா நாட்டு வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு இடம்பெற்றது. நமது நாட்டில் அரசியல் ரீதியான தற்போதய நிலமையை அறிந்து செல்வதற்காகவே தனது விஜயம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில் இலங்கை நாட்டில் காணப்படும் பிரச்சினை போன்று தமது நாடும் பிரான்ஸ் உடனான ஒரு பிரிவினை வாதப் பிரச்சினையை எதிர் கொண்டது எனவும் பின்பு அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு தற்போது இரு தரப்பினரும் பிரச்சினையின்றி சுமூகமாக உள்ளனர் என்றும் அது போன்று நம் நாட்டில் அவ்வாறு ஒரு முன்னெடுப்பை செய்வதில் என்ன பிரச்சினை நிலவுகிறது என என்னிடம் வெளிவிவகார அமைச்சர் வினாவினார்.

நாட்டின் ஒருமைப்பாட்டை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அதன் அடிப்படையிலேயே மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர் என்று எடுத்துகாட்டிய நான் நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. எமது தனித்துவத்தையே கோரி நிற்கிறோம் எனவும் அவரிடம் சுட்டிக்காட்டினேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் நாம் முன்னய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நிலமையிலேயே வாழ்ந்து வந்தோம். முன்னர் தமிழர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று தமது வர்த்தக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் 1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த நிலைமை மாற்றம் பெற்று தனி சிங்கள ஆட்சி நாடாக இலங்கை மாறியது. அதிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளும் ஆரம்பமானது. என்பதை அவரிடம் எடுத்துக் காட்டினேன்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களின் இன, மத, மொழி, கலாச்சாரத்தின் தனித்துவம் எவ்வாறு உள்ளதோ அதனடிப்படையில் எமது இன, மொழி, மத, கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும். எமக்கான தனித்துவம் வழங்கபட வேண்டும் என்று நான் கூறிய கருத்தை வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

நீங்கள் தமிழன் என்பதிலும், இலங்கையன் என கூறுவதிலும் பெருமைப்படுகிறீர்களா? என வித்தியாசமான ஒரு கேள்வியினை என்னிடம் வெளிவிவகார அமைச்சர் கேட்டிருந்தார். இதற்கு 'அவ்வாறு நான், நாம் இருப்பதற்கு எமது தனித்துவம் எமக்கு வழங்கப்படவேண்டும், வடபகுதிகளில் தமிழினத்தை விட அயலினத்தின் குடியேற்றம் எமக்கு வேண்டாம் அதனை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது' என நான் அவரிடம் கூறினேன்.

என்னுடன் தொடர்ந்து உரையாடிய வெளிவிகார அமைச்சர் இந்த நாட்டில் இன ஒருமைப்பாடு ஏற்படுத்துவதற்கு கனடா கண்ணும் கருத்துமாக உள்ளதெனவும், கனடாவில் உள்ள தமிழர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சிறந்த முறையில் தமது வாழ்வை தொடர்கின்றனர்.

அவ்வாறான ஒரு நிலமையை இங்கு உருவாக்குவதற்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .