2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கஜதீபன், பரஞ்சோதி கடும் வாக்குவாதம்

Menaka Mookandi   / 2016 மே 30 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

தெல்லிப்பழை (வலிகாமம் வடக்கு) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், இன்று திங்கட்கிழமை (30), நடைபெற்றது. இதன்போது, உரும்பிராயில் தற்காலிகமாக இயங்கிவரும் பாடசாலையொன்றை, சொந்த இடத்தில் இயங்கவைப்பது தொடர்பில் பாலச்சந்திரன் கஜதீபன், ஆரியகுட்டி பரஞ்சோதி ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற மேற்படி சண்டையின் போது, குறுக்கிட்ட மாவை எம்.பி, 'மாகாண சபை உறுப்பினர்கள் சண்டையிடுவதற்கு தனியான இடம் ஒன்று உள்ளது. அங்கு போய் சண்டை பிடியுங்கள். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் வந்து சண்டையிடாதீர்கள்' என எச்சரித்தார்.

வசாவிளானில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது உரும்பிராயில் இயங்கிவரும் பாடசாலையை, மீண்டும் சொந்த இடத்தில் இயங்க வைப்பது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், ஆரியகுட்டி பரஞ்சோதி ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

இடம்பெயர்ந்து உரும்பிராயில் இயங்கும் பாடசாலையை, சொந்த இடமான வசாவிளான் பகுதியில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கஜதீபன் கூறினார். அதனை மறுத்த பரஞ்சோதி, அந்தப் பாடசாலையில் தற்போது, உரும்பிராயைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதால் பாடசாலை தொடர்ந்து அங்கேயே இயங்க வேண்டும் எனக் கூறினார். இது தொடர்பில் இரண்டு உறுப்பினர்களும் வாய்ச்சண்டையிட்டனர். இதன்போது குறுக்கிட்ட மாவை, 'இங்கு அபிவிருத்தி தொடர்பான விடயங்களை மாத்திரம் கதையுங்கள்' என்று மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .