2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

காணியை தனியார் உரிமை கோருவதை எதிர்த்து மீனவர்கள் போராட்டம்

Princiya Dixci   / 2016 மே 22 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் கடற்கரையை அண்மித்த 25 ஏக்கர் காணியை தனியார் ஒருவர் உரிமை கோருவதை எதிர்த்து அப்பகுதி மீனவர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை (22), பொலிகண்டி, ஆலடிவான் பகுதியில்  கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்ட பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் இப்பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், 'இப்பகுதியில் நாம் தலைமுறை தலைமுறையாக மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றோம். அத்துடன், இக்காணிப்பரப்பிலேயே எங்களது தெப்பங்கள், படகுகள், மீன்பிடி உபகரணங்கள் வலைகள் என்பவற்றை வைத்து வருகின்றோம்.

தற்போது இப்பகுதியில் உள்ள ஒருவர் நாம் பயன்படுத்துகின்ற பகுதி அதாவது மேற்கு சனசமூக நிலையத்தில் இருந்து கிழக்கு மீன்பிடி சங்க எல்லை வரையான 25 ஏக்கர் நிலப் பகுதியை தன்னுடையது என தெரிவித்து அவற்றை வேறொருவருக்கு விற்பனை செய்வதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.

இதனால், எமது தொழில் உபகரணங்களை நாம் வைப்பதற்கு இடமற்ற நிலையிலும் எமது தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இக்கடற்பரப்பில் தொழில் செய்யும் நாம் 150 குடும்பங்களை சேர்ந்த 400 பேர் இவ் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றோம்.

எனவே, இப் பிரச்சினை தொடர்பாக கிராம சேவகர், பிரதேச செயலர், மாவட்டச் செயலர் கடற்றொழில் திணைக்களம், கடற்றொழில் சமாசம் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு வந்திருந்த நிலையில், முதலமைச்சர் மாத்திரமே இப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார். 

எங்களுடைய இப் பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கவில்லையெனின்  வடமராட்சி 14 கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்போம்' என்றார்.

ஆர்ப்பட்டத்தின் பின்னர், ஆர்ப்பட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கும் வடமாகண முதலமைச்சருக்கும் ஒப்படைப்பதற்காக மகஜரொன்றை வட மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனிடம் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .