2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நிபந்தனைகள் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 27 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அரசாங்கத்தின் மீள்குடியேற்றம் தொடர்பான நிபந்தனைகள் எமது மக்களின் மீள்குடியேற்றத்துக்குத் தடையாக அமையாமல், மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும். இதற்கு, எமது மக்களின் நிலையறிந்த வகையிலான நிபந்தனைகளே உட்படுத்தப்பட வேண்டுமேயொழிய, நிபந்தனைகளை வகுத்துவிட்டு, அந்த நிபந்தனைகளை எமது மக்கள் மீது திணிப்பதால் மீள் குடியேற்றம் ஒருபோதும் சாத்தியப்படப் போவதில்லை' என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'அண்மையில் மீள் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்ட பலாலி வடக்கு அன்ரனிபுறம் பகுதியில் பாரிய மண் அரண்கள் இருப்பதால் அப் பகுதி கடற்றொழிலாளர்களால் சிறிய கட்டுமரங்கள் மூலமே தொழிலில் ஈடுபடக்கூடியதாக இருக்கின்றது.

இதன் மூலம் போதிய வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாதுள்ள நிலையில், காணிகளைத் துப்பரவு செய்தால்தான் வீட்டுத் திட்டம் தரப்படும் என அதிகாரிகள் கூறியதாகவும் தெரியவருகிறது.

பொருளாதார நிலையில் பல வருட காலமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இம் மக்களுக்கு தங்களது காணிகளைத் துப்பரவு செய்து கொள்ளக்கூட இயலாத நிலையே காணப்படுகின்றது.

எனவே, இத்தகைய விடயங்கள் தொடர்பில் உதவிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் எமது மக்களால் ஈடுகொடுக்க இயலாத சில விதிமுறைகளை மாற்றி, எமது மக்கள் மீள் குடியேற்றத்தின்பால் ஆர்வம் கொள்ளத்தக்க வகையிலான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .