2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

'போர்க்காலத்தில் வீழ்ச்சியடையாத கல்வி மட்டம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது'

Thipaan   / 2016 மே 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொரண்குமார் சொரூபன்

'எமது கல்வி வளர்ச்சியானது போர்க் காலத்தில் கூட வீழ்ச்சியடையவில்லை. ஆனால், போருக்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, இதற்கான காரணம் என்னவென இனங்காணப்பட்டு, அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஏனெனில், யாழ்ப்பாணமானது கல்வியில் உயர்ந்தது என்ற பாரம்பரியமும் வரலாறும் கொண்டது. ஆகவே அதனை நாம் இழந்து விட கூடாது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

யாழ். இராமநாதன் மகளிர் கல்லூரியில், வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற, வலிகாம வலய ஆசிரிய மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'தற்போது பல்கலைகழங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றவர்களில் 60 சதவீதமானவர்கள் கலைத்துறையை சார்ந்தவர்களாகவே உள்ளனர். இந்நிலைமை மாற்றப்பட வேண்டும். கூடிய மாணவர்கள் விஞ்ஞானம், வர்த்தக துறைகளில் பயிலுகின்றவர்களாக அல்லது அவற்றை பயிலக்கூடியவர்களாக மாற்றப்பட வேண்டும்.

எனவே, ஒரு மாணவன், எட்டாம் வகுப்புக்குப் பின்னரான அடுத்து மூன்று வருடங்களில், அவன் பல்கலைகழகத்தில் என்ன துறை கற்கப்போகிறான் என்பதை ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்.

இன்று அதிகளவான மாணவர்கள் கலைத்துறையில் கற்று வெளியேறியுள்ள நிலையிலும் அவர்களுக்கு பொருத்தமான வேலைகள் வழங்கப்படவில்லை. இதேவேளை, தாதியர் துறையிலே அதிகளவான விண்ணப்பங்கள் இருக்கின்ற போதும் அதில் எமது மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவது குறைவாகவே உள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பின் அதற்கான தகுதி எம் மாணவர்களுக்கு இல்லையென்கிறார்கள். அதாவது விஞ்ஞானதுறையில் கணிதத்துறையில் பயிலும் மாணவர்கள் அதில் சித்தியடையும் மாணவர்கள் குறைவாக இருப்பதே காரணமாகும்.

தற்போது எமது சமூகமானது போதைவஸ்து பாவனைக்குள் அடிமைப்பட்ட சமூகமாக மாறியுள்ளது. நாங்கள் அரசியலிலும் அடிமைப்பட்டவர்களாக இல்லை. ஆனால், தற்போது போதைவஸ்த்துக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டவர்களாக மாறியிருக்கிறோம். எனவே இந்நிலைமை மாற்றமடைய வேண்டும். தற்போது தான் சில கைதுகள் இடம்பெறுகின்றன.

ஆனால் இன்னமும் அவற்றை வியாபாரம் செய்யும் வர்த்தக முதலாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும்  போதைக்கு முற்றுமுழுதாக அடிமைப்பட்டுள்ள மாணவ சமூகத்தையும் சமூகத்தையும் முற்றாக மீட்டெடுக்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .