2021 ஜனவரி 23, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் கைகலப்பு: ஒருபீடம் மூடப்பட்டது

Princiya Dixci   / 2016 ஜூலை 16 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே இன்றுச் சனிக்கிழமை (16)  மாலை கைகலப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்விலேயே இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மாணவர் குழுவுக்கும் சிறுபான்மை இனத்தைச்சேர்ந்த மாணவர் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே கைகலப்பாக மாறிவிட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பல்கலைக்கழக விஞ்ஞானப்பீடத்துக்கு தெரிவான மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு இன்றுச் சனிக்கிழமை இடம்பெற்றது.

புதிய மாணவர்களை வரவேற்கும் போது கண்டிய நடனம் ஆடி வரவேற்க வேண்டுமென பெரும்பான்மையின மாணவர்களும், இல்லையில்லை நாதஸ்வரத்துடன் மேளம் கொட்டியே வரவேற்க வேண்டுமென சிறுபான்மையின மாணவர்களும் முரண்பட்டுக்கொண்டுள்ளனர்.  

இந்த முரண்பாடே இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த மோதலில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கில்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகக் கட்டடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும்பான்மையின மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அம்மாணவர்களை, விடுதிகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வரையிலும் இந்தப்பீடத்தை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .