2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வடமாகாணத்தில் மாற்று வலுவுள்ளோர் கொடுப்பனவில் புறக்கணிப்பு

George   / 2016 ஜூலை 22 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

கடந்த காலங்களில் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து, அம்மாகாணங்களில் மாற்று வலுவுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, அதில் வட மாகாணத்தைச் சேர்ந்தோருக்கான கொடுப்பனவில் புறக்கணிப்புக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மொழிமூல விடைக்கான வினாக்கள் நேரம் நிறைவடைந்ததும், நிலையியற் கட்டளை 23/3இன் வினாவொன்றை எழுப்பி உரையாற்றும்போதே, டக்ளஸ் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

மாற்று வலுவுள்ளோரென வடமாகாணத்தில் 16,213 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மாற்று வலுவுள்ளோருக்கான வழங்கப்படும் 3,000 ரூபாய் கொடுப்பனவை, வெறுமனே 4,003 பேர் மாத்திரமே பெறுவதாகத் தெரிவித்தார். ஏனையோர் 12,210 பேருக்கு, இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை என அவர் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களான வடக்குக்கும் கிழக்குக்கும், விசேட ஏற்பாடாக, இந்தக் கொடுப்பனவைப் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா எனக் கோரிய டக்ளஸ் எம்.பி, இல்லாவிடில், வேறு விசேட திட்டங்களை ஏற்படுத்தி, அதன் ஊடாக உதவக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளனவா எனவும் கேள்வியெழுப்பினார்.

அத்தோடு, மாற்று வலுவுள்ளோருக்கான மலசலகூடங்களை அமைப்பதற்கு அண்மையில் நிதி வழங்கப்பட்ட போதிலும், அந்நிதி போதுமானதாக இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மடிக்கணினி பெறுவதில் சிக்கல்

மாற்று வலுவுள்ள, வட மாகாணத்திலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், மடிக்கணினி பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்குவதாகச் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி, தவணைக் கட்டணங்களைச் செலுத்தி, அவற்றைப் பெறுவதற்கான ஏற்பாடு காணப்படுகின்ற போதிலும், அதைச் செலுத்துவதில் கூட சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்கள் காணப்படுவதால், மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராயுமாறு கோரினார்.

இந்தக் கேள்விகள், சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவிடம் முன்வைக்கப்பட்ட போதிலும், அவர் அவையில் இல்லாத காரணத்தால், பிறிதொரு நாளில் பதிலளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .