2021 ஜனவரி 20, புதன்கிழமை

வலி. வடக்குக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2016 ஜூலை 08 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இருந்த மக்கள் காணிகளின் சில பிரிவுகள், அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் எஞ்சியுள்ள மக்களின் வீடுகள், தளபாடங்கள் இடித்து அழிக்கப்பட்டு களவாடப்படுகின்றது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த, மீள்குடியேற்ற பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (08), யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனந்தி சசிதரன், யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அனந்தி, 'காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, குரும்பசிட்டி, கட்டுவன் ஆகிய இடங்கள் அண்மையில் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு மீள்குடியமர்விற்கு அனுமதித்த தினத்தில் இருந்த யுத்த காலத்தில் எஞ்சிய மக்களின் வீடுகள் உடமைகள் தற்போது அங்கு இல்லை. பிரதேசவாசிகள் சிலரால் குறித்த பொருட்கள் மற்றும் மரங்கள் அழிக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றிச்செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது' என்றார்.  

'ஆகவே, இதனைத் தடுத்து நிறுத்தி, மீள்குடியேறவுள்ள மக்கள் தமது எஞ்சிய சொத்துக்களையாவது பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, குறித்த பிரதேசத்தில் பொலிஸ் கண்காணிப்பு போடப்பட்டு பொலிஸாரின் கண்காணிப்பில் மீள்குடியமர்வு செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், 'குறித்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கமைவாக மீள் குடியமர்வு பகுதியில் பொலிஸ் கண்காணிப்பகம் ஒன்று நிறுவப்பட்டு உட்செல்பவர்களின் தரவுகள் பதியப்படுகின்றன.

இருந்தும் 25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடங்களை பார்வையிட வரும் மக்களை நாம் கட்டுப்படுத்துவது சரியாக அமையாது. அந்த வகையில் மக்களை பாதிக்காத வகையில் களவுகள் இடம்பெறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .