2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து செயலமர்வு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியலமைப்பு கற்கை நிறுவனமானது மாகாணசபை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தேசிய அமைப்புடன் இணைந்து 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான செயலமர்வினை நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்தியது.
 
நாடெங்கும் மேற்படி செயலமர்வானது மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்டு வரும் நிலையில், வடமாகாணத்திற்கான செயலமர்வு யாழ். திருமறைக் கலாமன்ற திருத்தூது மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விசேட பிரதிநிதிகளாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்த லைவர் எம்.சந்திரகுமார் பத்மநாபா, ஈபி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர் நாயகம் தி.சிறிதரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.முஸ்தபா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன பேராசிரியர்களான ஏ.எம்.நவரட்ண பண்டார, ரஞ்சித் அமரசிங்க, அசோக்க எஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கான நடைமுறைச் சாத்தியமான ஓர் ஆரம்பப் புள்ளியே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தவிர அதுவே தீர்வல்ல எனவும் கூறினார்.
 
இந்த செயலமர்வில் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு என்ற தலைப்பில் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்னவும், அதிகார கையளிப்பிற்கு பிரவேசிக்கும்போது ஏற்படக்கூடிய அரசாங்க நிதி விடயங்கள், எண்ணக்கருக்கள், தடைகள் மற்றும் சவால்கள் என்ற தொனிப்பொருளில் அசோக்க எஸ் குணவர்த்தனவும், மாகாணசபைகளின் காணி மற்றும் அபிவிருத்திச் சிக்கல்களும் சவால்களும் என்ற தலைப்பில் பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்கவும் மாகாணசபை அரச நிர்வாகம் என்ற விடயதானத்தில் பேராதனை அரசறிவியல்த்துறை பேராசிரியர் ஏ.எம்.நவரட்ண பண்டார அவர்வும் உரையாற்றினர்.
 
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலர் இந்த செயலமர்வில் கலந்து கொண்டதுடமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--