Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமராட்சி கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நேற்று செவ்வாய்க்கிழமை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. மீள்குடியேற்றம் தொடர்பாக பிரமாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வானது அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான 55 ஆவது படையணியினரின் ஏற்பாட்டில் யாழ்.அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் மருதங்கேணி பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 55 ஆவது படையணித் தளபதி பிரிகேடியர் சுகத் பெரேரா வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் என்.திருலிங்கநாதன், மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம், பிராந்திய சுகாதார சேவைகள் உதவிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், கூட்டுறவு உதவி ஆணையாளர் அருந்தவநாதன், கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தர்மலிங்கம் உள்ளுராட்சி திணைக்கள உதவி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், ஈ.பி.டி.பி வடமராட்சி அமைப்பாளரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேசசபைத் தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன், போக்குவரத்துச்சபை மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை ஆகியவற்றின் அதிகாரிகள் ஆகியோருடன் அரச அதிகாரிகள் படை அதிகாரிகள் மற்றும் மீளக்குடியேறும் பெருந்தொகையான பொதுமக்களும் பங்குகொண்டனர்.
இங்கு சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்றையதினம் இப்பிரதேச மக்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக தாமதிக்கப்பட்ட மீள்குடியேற்றம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இவ்வளவு காலமும் அவாவுடனும் விருப்பத்துடனும் உறுதியுடனும் காத்திருந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பினை சரிவரப் பயன்படுத்த வேண்டும்.
கடந்தகால தவறான அரசியல் வழிநடத்துதலின் காரணமாக விரும்பத்தகாத துன்பகரமான நிகழ்வுகளிலிருந்து இயல்பு வாழ்வினை ஜனாதிபதி மீட்டுத் தந்துள்ளார். எனவே பொதுமக்களின் சார்பில் ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றேன். மீள்குடியேறிய மக்களுக்குரிய அனைத்து வசதிகளும் ஒரே இரவில் கிடைத்துவிடப் போவதில்லை. ஆயினும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணமே இது. எனவே மீளக்குடியேறும் மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்துவைக்க உயர்மட்ட மாநாடு ஒன்று நடத்தப்பட்டு உடனடி பிரச்சினைகளைத் தீர்க்க முழு முயற்சி எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடன நிகழ்ச்சியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மீளக்குடியேறிய மக்களுக்கு ஆரம்பகட்ட உடனடிக் கொடுப்பனவாக தலா ஐயாயிரம் ரூபா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் வீடு கட்டுவதற்குரிய சீமெந்து கூரைத்தகடுகள் மற்றும் வீட்டு உபகரணப் பொருட்கள் என்பனவற்றை அதிதிகள் பொதுமக்களுக்கு கையளித்தனர். மீளக்குடியேறும் பாடசாலை மாணவர்களுக்கு 55 ஆவது படையணி சார்பில் கற்றல் உபகரணங்களை தளபதி பிரிகேடியர் சுகத் சில்வா வழங்கி வைத்தார்.
மீள்குடியேற்ற நிகழ்வில் செம்பியன்பற்று வடக்கு தெற்கு தாளையடி வத்திராயன் மருதங்கேணி ஆழியவளை உடுத்துறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை விசேட அம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago