2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வலி வடக்கு மூன்று கிராம அலுவர் பிரிவுகளில் விரைவில் மீள்குடியேற்றம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 09 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

வலிவடக்குப் பகுதியில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் அடுத்த சில தினங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதாக பாரம்பரியக் கைத்தொழில் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.  

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் மட்டுமே இருக்கின்றன. உயர் பாதுகாப்பு வலயம் என்று எதுவுமேயில்லை. இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவரவர் இடங்களில் குடியமர்த்தப்படுவர். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.


வலி வடக்கைச் சேர்ந்த மக்கள் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவர். இதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்தவாறே இருக்கிறோம். விரைவில் வலிவடக்கு மூன்று கிராம அலுவலர் பிரிவுகளிலும் மக்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமர்த்தப்படுவர். மீளக்குடியமரும் மக்களுக்கான உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

இதேவேளை, வலிவடக்குப் பிரதேசத்தின் உட்கட்டுமானப் பணிகள் செம்மையான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரதேச செயலர் திரு. முரளிதரன் ஒழுங்கமைத்திருந்த இந்தக் கூட்டத்தில் மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் ஆராயப்பட்டது. இதன்போது திணைக்களங்களின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மக்களால் முன்வைக்கப்பட்ட குடிநீர், மின்சார விநியோகம், காணி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஆராயப்பட்டு விரைவில் அவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X