2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஈ.பி.டி.பி. பெயரை எவரும் தவறாகப் பயன்படுத்தினால் சட்டநடவடிக்கை: அமைச்சர் டக்ளஸ்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நகரை சுத்தமாகவும் அழகாகவும் பேணிப் பாதுகாப்பதற்கு வர்த்தக சமூகம் முழுமையான ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் வழங்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகரப் பகுதியில் நவீன முறையில் 05 மாடிக் கடைத் தொகுதிகளைக் கட்டுவது தொடர்பாகவும், அதன்போது வர்த்தக சமூகத்தின் நிலைப்பாடு பற்றியதுமான கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்...

கடந்த 20 வருடங்களுக்கு முன்பிருந்த சமூகமாக மீண்டும் நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுடன் அதிலிருந்தும் வளர்ச்சிபெற்று சுதந்திரமாக கருத்துச் சொல்லும் நிலையும் உருவாக வேண்டும்.

யாழ். நகரை சுத்தமாகப் பேணிப்பாதுகாக்கும் அதேவேளை அதனை அழகாக வைத்திருக்க வேண்டிய முக்கிய கடப்பாடும் வாத்தக சமூகத்திற்கும் உண்டென்பதுடன் அதற்கு ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் வழங்க வேண்டுமென்றும் யாழ். மாநகரசபை தனது வருமானத்தை நியாயப்பூர்வமான முறையில் பெருக்கிக் கொள்வதற்கும் எல்லாத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.

முக்கியமாக ஈ.பி.டி.பி. பெயரைப் பயன்படுத்தி முறைகேடான செயல்களில் எவரும் ஈடுபடும் பட்சத்தில் அதுகுறித்து உடனடியாக பொலிஸாரிடம் அறிவிக்கும் படியும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் அங்கு உறுதிபடத் தெரிவித்தார்.

எதிர்வரும் தைப்பொங்கலுக்குப் பின்னரான நாளொன்றில் வர்த்தக சமூகத்தினரையும், முதலீட்டாளருடனும் கலந்துரையாடி அதன் மூலமும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

நவீன கட்டிடத் தொகுதி அமைக்கும் பட்சத்தில் வர்த்தகர்களுக்கான பிரத்தியேக இடம் ஒதுக்கிக் கொடுக்கப்படுவது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மாநகரசபை உயர் அதிகாரிகள், வர்த்தக சமூகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--