2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

தெல்லிப்பளை சோதனை சாவடியை பின்னகர்த்த இணக்கம்

Super User   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

யாழ். உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் தெல்லிப்பளை சந்தியிலுள்ள சோதனை சாவடியை காங்கேசன்துறை திசையில் 500 மீற்றர் தூரம் பின்னகர்த்துவது குறித்து யாழ் இராணுவத் தளபதிக்கு அறிவிப்பதற்கான பொறுப்பை தான் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றில் நேற்று ஏற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட பலர் 2003 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவொன்று நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது சட்டமா அதிபர் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தமது வீடுகளில் தாம் வசிப்பதற்கு அனுமதிக்கப்படாதமை தமது அடிப்படை உரிமையை மீறுவதாக அறிவிக்க வேண்டுமெனக் கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சந்திரிகா பண்டாரநாயக்க (முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்), ரணில் விக்கிரமசிங்க (முன்னாள் பிரதமர்  ) முன்னாள் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் லயனல் பலகல்ல, மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க, சட்டமா அதிபர் ஆகியோர்  இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

யாழ் மாவட்டம் முழுவதும் மீள்குடியேற்றம் நடைபெறுவதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவீந்திர பெர்னாண்டோ, நீதிமன்றில் கூறினார்.

மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு மாதகாலத்தில் தெரிவிக்கும்படி பிரதம நீதியரசர் அசோக டி சில்வா, நீதிபதிகள் சலீம் மர்சூவ், கே.ஸ்ரீபவன் ஆகியோர் பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

மாவை சேனாதிராஜா மற்றும் மேலும் இருவர் சார்பாக மோகன் பாலேந்திராவின் நெறிப்படுத்தலில் எம்.ஏ.சுமந்திரன், வி.எஸ்.கணேசலிங்கம் ஆகியோர் ஆஜராகினர். மற்றொரு மனுதாரர் சார்பில் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி ஆஜரானார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--