2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு விழா

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முத்தமிழ் மன்றத்தின் வெளியீடாக அமையும் கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு விழா நேற்று மாலை 4 மணிக்கு கலாசாலையில் உள்ள ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் வே.கா.கணபதிப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார். முத்தமிழ் முன்றத்தின் முன்னாள் காப்பாளர் கலாநிதி செ.திருநாவுக்கரசு முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். முத்தமிழ் மன்றத்தின் காப்பாளர் விரிவுரையாளர் ச.லலீசன், முத்தமிழ் மன்றத் தலைவர் அ.ல்.பிலால், சஞ்சிகையின் இதழாசிரியர் என்.எம்.எம். றிப்கான் ஆகியோர் உரையாற்றினர்.

கடந்த கல்வியாண்டில் கலாசாலையில் இருநூற்றைம்பதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆசிரிய மாணவர்கள் பயிற்சி பெற்றிருந்தனர். இவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் கலைமலர் சஞ்சிகை பச்சைநிற அட்டைப் படத்துடன் வெளியாகியுள்ளது. மலரின் உள்ளும் இஸ்லாமிய மணம் வீசும் ஆக்கங்கள் பெருமளவு இடம்பெற்றுள்ளன. கலாசாலை வரலாற்றில் இது 41 ஆவது மலராகும்.

210 பக்கங்களில் வெளியாகியுள்ள மலரில் ஐந்து கட்டுரைகளை கலாசாலையின் கல்வியியலாளர்கள் வரைந்துள்ளனர். ஆசிரிய மாணவர்களது 60 கட்டுரைகளும் 25 கவிதைகளும் மற்றும் முத்தமிழ் மன்றத்தால் நடத்தப்பட்ட எழுத்தாக்கப் போட்டிகளில் முதலிடம் பெற்ற ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. கலாசாலை மாணவர்களை நெறிவாரியாக வெளிக்காட்டும் வகையில் வண்ணப் புகைப்படங்களும் அவர்களது பெயர், தொடர்பு முகவரி என்பனவும் இடம்பெற்றுள்ளன.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தனது உரையின் போது தெரிவித்தவை வருமாறு யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியம் தனித்துவமானது. அத்தகைய பாரம்பரியத்திற்குட்பட்ட விரிவுரையாளர்களிடம் கல்வியைப் பெற்றமை ஆசிரிய மாணவர்களாகிய நீங்கள் பெற்ற அதிர்ஷ்டமாகும்.

இலங்கையில் இன்று நாடெங்கிலும் தமிழ் பேசப்படுவதற்கு இஸ்லாமியரின் பங்களிப்பே பிரதான காரணம். இன்று இஸ்லாமிய சகோதரர்கள் சிறந்த இலக்கியத் தரத்துடன் இலக்கியங்களைப் படைக்கின்றனர். அதன் வாசத்தை கலைமலரிலும் காணமுடிகின்றது.

பேராசிரியர் என்ற பதம் முற்காலங்களில் கலாசாலையில் கற்பிப்பவர்களுக்கே உடைமையாகவிருந்தது. ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்பது இதன் பொருளாகும். பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட பின்னர் அந்தப் பட்டத்தைப் பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்புக்களை வழங்கியுள்ளது. மகாவித்துவான் ந.வீரமணி ஐயர், கவிஞர் இ.முருகையன், குருகவி மகாலிங்கசிவம் போன்ற ஜாம்பவான்கள் இங்கு பணி செய்துள்ளனர். உங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களை என்றும் நினைத்திருங்கள் அவர்கள் தோன்றாத் துணையாக இருந்து ஆசி நல்கிய வண்ணம் இருப்பர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--