2021 மே 08, சனிக்கிழமை

யாழில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோரின் விபரங்கள் வெளியிடப்படும்: அரச அதிபர்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

'யாழ். குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை தொடர்பான முறைப்பாடுகள் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறாக பெண்கள் மீது பாலியல் ரீதியல் துன்புறுத்தும் நபர்கள் குறித்த விபரங்களை எதிர்காலத்தில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடவுள்ளேன்' என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை காலை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் பாடசாலைகளிலும், பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு வருகின்றனர். இவை தொடர்பில் இதுவரையில் 126 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பான பெயர் விபரங்கள் எம்மிடம் உள்ளன. எதிர்காலத்தில் அவர்களின் பெயர் விபரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட் பாவனையும் அதிகரித்துள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான விழிப்புணர்வு தற்போது அவசியமாக இருக்கின்றது' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X