2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதிகளில் திருடர்களின் கைவரிசை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணம் வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதிகளில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களினால் பொதுமக்கள் மிகவும் அல்லப்படுகின்றனர்.

கடந்த 20 வருடகால இடைவெளியின் பின்னர் வலி. வடக்குப் பகுதி மக்கள் மீள்குடியேறி தமது வீடுகளை திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  ஆட்கள் நடமாட்டம் அற்ற வேளைகளில் வீடுகளுக்குள் நுழையும் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டுகின்றனர்.

வீடுகளிலுள்ள யன்னல் கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை திருடர்கள் திருடிச்செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து தெல்லிப்பளை பொலிஸாரால் அண்மையில் நடத்தப்பட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு வந்தனர். அத்துடன், இவ்வாறான திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அம்மக்கள் வலியுறுத்தினர்.

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கடந்த வாரம் பிடிக்கப்பட்டு கிராம அலுவலர்கள் மூலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டபோதிலும், குறிப்பிட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தாது பொலிஸார் வெளியே விட்டமையால் தொடர்ந்தும் இவர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மீள்குடியேற்றப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும்  தமது ரோந்து நேரத்தின்போது பலரைக் கடந்த 5 மாதங்களில்  கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.  இவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரமின்மையால் அவர்களை எச்சரிக்கை செய்து விடுவித்ததாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .