2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

உரிமைப் போராட்டத்தில் இராணுவம் தலையிட கூடாது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்
 
தொழிலாளர்களின் பிரச்சினையில் இராணுவமோ, பொலிஸாரோ தலையிட கூடாதென்றும், இராணுவத்தினர் தேசிய பாதுகாப்பில் ஈடுபட வேண்டுமென புதிதாக ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந் இன்று வியாழக்கிழமை(17) தெரிவித்தார்.
 
யாழ். ஊடக மையத்தில் இன்று(17) பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
 
யாழ். மாநகர சபையில் கடமையாற்றும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக நிரந்தர நியமனம் வழங்க கோரி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
 
அந்த போராட்டத்தினை நடத்தும் தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தினை முடக்கும் வகையில், இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழில் உள்ள இராணுவத்தினரை பயன்படுத்தி துப்பரவு பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்தள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
 
அந்தவகையில், யாழ். மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உரிமைப் போராட்டம். அந்த உரிமைப் போராட்டத்தில் இராணுவத்தினர் தலையிட கூடாது. அவ்வாறு தலையிடாத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதய பெரேராவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்.
 
இவ்வாறான உரிமைப் போராட்டத்தில் இராணுவமோ, பொலிஸாரோ தலையிட்டால், தொழிலாளர்கள் வேறு மாதிரியான செயல்களில் ஈடுபடுவதற்கு இந்த விடயம் உந்து சக்தியாக அமையுமென்றும் அவர் கூறினார்.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் யாழ்.மாநகர சபை சுகாதார தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்தோம். ஆனால், தொழிலாளர்களின் பிரச்சினையினை தீர்ப்பதற்கு யாழ். மநாகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா முன்வரவில்லை.
 
தொழிலாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில், யாழ். மாநகர முதல்வருக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
 
தொழிலாளர்களின் நிரந்தர நியமனத்தில் யாழ். மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன் கையொப்பமிட வேண்டுமே தவிர அமைச்சருக்கும் இவ்விடயத்திற்கும் தொடர்பில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
 
அந்த வகையில், வடமாகாண சபை முதலமைச்சராக இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தினை கவனத்திலெடுத்து யாழ். மாநகர சபையின் தொழிலாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டுமென்றும் அவர் கூறினார்.
 
ஊள்ளுராட்சி அமைச்சராக இருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் ஏன் யாழ். மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்களின் நிரந்தர நியமன விடயத்தில் தலையிட முடியாதென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
யாழ்.மாநகர சபையும், வடமாகாண சபையும் இணைந்து யாழ். மாநரக சபையின் சுகாதார தொழிலாளர்களுக்கான நிரந்தர நியமனத்தினை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஆவண செய்யாவிடின், எதிர்வரும் மே மாதம் 01 ஆம் 02 ஆம் திகதிகளில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு முற்போக்கு தமிழ் தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
மக்களின் பிரச்சினையினை தீர்ப்பதற்கு த.தே.கூ முன்வரவேண்டும்
 
மத்திய அமைச்சின் பிரச்சினைகளைப் பற்றி கதைப்பதை விடுத்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வரவேண்டும் என அவர் கூறினார்.
 
இலங்கை அரசுக்கு சார்பான தென்னாபிரிக்கா தமிழ் மக்களின் பிரச்சினையினை தீர்;ப்பதற்கு முன்வர வேண்டுமென்று கோரிக்கை விடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சென்று வந்துள்ளனர்.
 
ஆனால், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றது. முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்;த்து வைத்து விட்டு, அரசியல் தீர்வினை நாட வேண்டும்.
 
வடமாகாண சபை தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முனைவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்றும் அவர் கூறினார்.
 
தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய விடயங்கள் ஒன்றினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு செய்யவில்லை. மத்திய அமைச்சின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைந்து வருகின்றது.
 
முதலில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்;ப்பதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்;ப்பதற்கு முன்வந்தால், அதற்கு முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினராகிய தாமும் ஆதரவு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X