2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஆலயங்களை நிர்மாணிக்க பேராதரவு வழங்குகின்றோம்: சந்திரகுமார் எம்.பி

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


'கலையிழந்து போயுள்ள எமது தேசத்தை மீளவும் செழிப்புமிக்க தேசமாக மாற்றுவதற்கு ஆலயங்கள் வழிவகுக்கின்றன. அதன் அடிப்படையில் ஆலயங்களை மீள் நிர்மாணம் செய்வதற்கு நாம் பேராதரவு வழங்கி வருகின்றோம்' என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.

கனடாவில் வசிக்கும் மாசாரைச் சேர்ந்த உமாசுதன் என்பவர் பளை, மாசாரை பானாவில் பிள்ளையார் ஆலயத்திற்கு 200,000 ரூபா நிதியினை வழங்கியுள்ளார். இந்நிதியினை ஆலய  நிர்வாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(20) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'கடந்தகால யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான ஆலயங்களை மீள நிர்மாணிக்கும் பணிக்கு நாம் பல உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றோம்.

ஆலயங்கள் எமது பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றும் அதேவேளை யுத்தத்தின் பாதிப்புக்களை சுமந்து வாழும் எமது மக்களின் உள ரீதியான ஆற்றுகைக்கும் வழிவகுப்பதோடு கலையிழந்த எமது தேசத்தை மீளவும் செழிப்புமிக்க தேசமாக மாற்றுவதற்கும் வழிவகுக்கின்றன.

அதன் அடிப்படையில் பளை பிரதேசத்திலும் பல ஆலயங்களை மீள நிர்மாணிக்கும் பணிக்கு நாம் பேராதரவு வழங்கி வருகின்றோம். இதற்காக நாம் அரசாங்கத்திடமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது உறவுகளிடமிருந்தும் உதவித்திட்டங்களை பெற்று வழங்கியிருக்கின்றோம்.

அதன் அடிப்படையில் பானாவில் பிள்ளையார் ஆலயத்திற்கும் நாம் இந்து கலாசார அமைச்சின் நிதியினூடாக இரண்டு லட்சம் ரூபாவினை வழங்கியுள்ளோம். அதன் மூலம் தற்போது கட்டட நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது கனடாவில் வசிக்கும் மாசாரைச் சேர்ந்த நண்பர் உமாசுதன் என்பவர் இவ் ஆலயத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா நிதியினை வழங்கியுள்ளார். எனவே இவ்வாறான உதவிகளை வழங்கும் எமது உறவுகளுக்கு எமது மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது மக்களின் வாழ்வியல் மேம்பாடு மற்றும் பிரதேசங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஆக்கபூர்வமான உதவிகளை வழங்க முன்வரும் புலம்பெயர்வாழ் உறவுகளின் உதவித் திட்டங்களை விரும்பி வரவேற்கின்றோம்.

இந்த ஆலயத்திற்கு அருகிலுள்ள சிறுகுளத்தினை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

எனினும், இவ்வாறான பகுதிகளில் சனத்தொகை மிகக்குறைவாக காணப்படுகின்ற அதேவேளை இங்குள்ள காணிகளின் உரிமையாளர்கள் அக்காணிகளை பயன்படுத்தாததன் விளைவாக குடியிருக்கும் மக்களின் விவசாய நடவடிக்கைகளும் அவர்களின் வாழ்வியலும் பாதிப்புக்குள்ளாகின்றது. இக்காணிகள் உரிமையாளர்களின் பயன்பாட்டுக்கு வரவேண்டும்.

தொடர்ந்தும் பயன்படுத்தப்படாதுள்ள நிலங்களை இங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு செயற்பாட்டிற்காக பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .