2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

திவிநெகும ஆறாம் கட்ட பணிகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திட்டத்தின் 6ஆம் கட்டம் இன்று திங்கட்கிழமை (20) நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வளம் நிறைந்த இல்லம் சுபீட்சமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் யாழ். மாவட்டத்துக்கான மாவட்ட மட்ட நிகழ்வு யாழ். பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆறாம் கட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டத்தின் மூலம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களினூடாக பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பொருட்கள், சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகள், வீட்டுத்தோட்டத்துக்கான விதைகள், கோழிக்குஞ்சுகள்  மற்றும் பழமரக்கன்றுகள் என்பன வழங்கப்படவுள்ளன.

யாழ். மாவட்டத்தில் ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு  180 குடும்பங்கள் படி  தெரிவுசெய்து உதவிப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
இன்றையதினம்  1 இலட்சத்து 97 ஆயிரத்து 506 பழமரக் கன்றுகள், 1 இலட்சம் தென்னங்கன்றுகள், 80 ஆயிரம் விதைப்பொதிகள், 32 ஆயிரத்து 625 அகத்தி கன்றுகள், 3179 கோழிக்குஞ்சுகள் மற்றும் 43 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு நான்கு வகையான மரக்கறி பயிர்களைக்கொண்ட ஒன்பது பயிர்கள் என வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், மேலதிக மாவட்ட செயலாளர் ரூபினி வரதலிங்கம், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இ.மோகனேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .