2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்காக விசேட ஏற்பாடுகள்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

இம்மாதம் 28ஆம் திகதி மற்றும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கான விசேட ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.

யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மற்றும் அந்தந்த துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு விடயங்கள் தொடர்பாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பில் மாவட்டச் செயலாளர் கூறியதாவது,

திருவிழா காலத்தில் குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரையான போக்குவரத்தில் ஈடுபடவுள்ள தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினருடைய படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அதற்கான அனுமதிகள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு படகுகளிலும் உயிர்காப்பு அங்கிகள் பயன்படுத்த வேண்டும். இக்காலப்பகுதியில் ஒருவருக்கான படகுச்சேவை கட்டணமாக ஒரு வழிப் பயணத்திற்கு 225 ரூபாய் அறவிடப்படும்.

யாழ் நகரிலிருந்து குறிகட்டுவான் வரை எதிர்வரும் 28ம் திகதி காலை 6 மணியிலிருந்து நண்பகல் 2 மணிவரை தனியார் மற்றும் அரச பேருந்துகள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடவுள்ளன. அந்தோனியார் ஆலய பூசை வழிபாடுகள் மார்ச் முதலாம் திகதி அன்று காலை 6 மணியளவில் இடம்பெற உள்ளதால் அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து கச்சதீவிலிருந்து பக்தர்கள் மீள திரும்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவிலிருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால் அவர்களின் வசதிகளுக்காக இந்திய நாணயங்களை இலங்கை நாணயமாக மாற்றக்கூடிய ஏற்பாடுகளுடன் கச்சதீவில் ஒரு உற்சவகால கிளையினை இலங்கை வங்கி அமைக்கவுள்ளது.

யாத்திரிகர்களின் உணவு, சுகாதாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குடிப்பதற்காக வழங்கப்படும் நீரானது சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே வழங்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

அத்துடன் பொது மக்களின் பாதுகாப்பிற்கென நூற்றுக்கணக்கான இலங்கை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இம்முறை கச்சதீவு பெருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 3,500இற்கு மேற்பட்ட யாத்திரிகர்களும் இலங்கையிலிருந்து 3,500இற்கு மேற்பட்ட யாத்திரிகர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .