2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

விசாரணைக்கு வருமாறு கஜேந்திரகுமாருக்கு பொலிஸார் அழைப்பு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் பிரதான அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (02) சென்றுள்ள சாவகச்சேரி பொலிஸார், திங்கட்கிழமையன்று (03) தன்னை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக வருமாறு கூறிவிட்டுச் சென்றதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை வேறு நிகழ்வுகள் இருந்தமையால் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லவில்லையெனவும், அது தொடர்பில் உதவியாளர் ஊடாக கடிதம் மூலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'கடந்த சனிக்கிழமை (01) சாவகச்சேரி பஸ் நிலையத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மூவரைப் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

எனினும், கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறிய கருத்தின் அடிப்படையில், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தாத வகையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கலாம் என்பது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு சென்று பொறுப்பதிகாரியிடம் நான் தெளிவுபடுத்தினேன்.

வாக்குவாதத்துக்கு பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி, கைது செய்தவர்களை விடுதலை செய்தார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (02) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைச் சேர்;ந்த மூவர் எமது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, அலுவலகத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், கரும்பலகையில் எழுதியிருந்த நிகழ்ச்சி நிரலையும் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.  

மேலும், என்னை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் கூறிவிட்டுச் சென்றனர். திங்கட்கிழமை எனக்கு வேறு வேலைகள் இருந்தமையால் பொலிஸ் நிலையத்துக்கு செல்ல முடியாது என்பதை உதவியாளர் மூலம் சாவகச்சேரி பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தினேன்.

எனினும், அழைத்தால் வரவேண்டும் எனவும் இல்லாவிடின் நீதிமன்றம் ஊடாக அழைப்பாணை விடப்படும் எனவும் பொறுப்பதிகாரி கூறியனுப்பியிருந்தார். ஆனால், இதுவரையில் நீதிமன்றம் ஊடாக எனக்கு எவ்வித அழைப்பாணையும் விடுக்கப்படவில்லை' என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .