2021 மே 06, வியாழக்கிழமை

ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவர முடியவில்லை: சி.வி ஆதங்கம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

அரசியல் கைதிகளின் வழக்குகளை நடத்துவதற்கு தேவையான நிதி சேகரிப்பதற்காக ஓர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் நிதியை திரட்டி வழக்கை நடத்துவோம் என எண்ணியிருந்தோம். எனினும், அந்த அமைப்பை  ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவர முடியாமல் போய்விட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

'சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அரசியலாக்கப்பட்டமையால் அவர்களுக்கு விடுதலை கிடைக்காமல் நீடித்துக்கொண்டிருக்கின்றது'; என்றும் அவர் தெரிவித்தார்.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இணைந்து, தங்கள் தந்தையரை விடுதலை செய்யுமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (30) பேரணியொன்றை நடத்தியதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குமாறு கோரி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

மகஜரைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்கூறுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கூறுகையில், ஜெனீவா கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர், இலங்கை அரசாங்கம், தமது நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் முகமாக சில நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். அதில் இது தொடர்பில் நன்மைகள் நடக்கும் என எதிர்பார்க்கின்றோம்;.

அரசியல் கைதிகள் தொடர்பில் கடந்த 2 வருடங்களாக பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால், இதுவரையில் நல்லத்  தீர்வு எடுக்கப்பட்டதாக இல்லை. வழக்குகள் முடிவடையாமல் காலம் சென்றுகொண்டிருக்கின்றது.

அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அப்பாவி இளைஞர்கள் அரசியல் கைதிகளாக மாட்டிவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் ரீதியில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும் எனக்கோரியிருந்தோம். ஆனால். அவர்களின் விடுவிப்பு தாமதமாகின்றது. இது தொடர்பில் இன்னும் ஓரிரு மாதங்களின் பின்னர் மீளாய்வு செய்ய முடியும் என்பதே அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்குச் சொல்லக்கூடிய பதிலாக தற்போது எங்களிடமுள்ளது' என முதலமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .