2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

’இறுக்கமான போராட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வேண்டும்’

Niroshini   / 2021 ஜனவரி 24 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-டி.விஜித்தா

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக, ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் திரண்டு, இறுக்கமான போராட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். - நல்லூர் இளங்கலைப் மண்டபத்தில், இன்று (24) நண்பகல் அனைத்து கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்ககும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 10 தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன எனவும் அதில் ஒன்பது கட்சிகள் கலந்து கொண்டிருந்தன எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறினார்.

எதிர்காலத்தில் கூட அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என பரிபூரணமாக நம்புகின்றோமெனத் தெரிவித்த அவர், எந்தக் கட்சி எந்த முன்னணி என்பது இல்லை எனவும் பிரச்சினை தமிழ் மக்கள் பாதிக்கக்கூடிய வகையில் அசுர வேகத்தில் செயற்பட்டுக் கண்டிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக உபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வேலைத்திட்டங்களையும் வகுப்பதற்காக தான் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றதெனவும் கூறினார்.

'பங்கு பற்றிய ஒவ்வொரு கட்சியிலும், சிவில் அமைப்புக்களில் இருந்தும் இரு உறுப்பினர்களைத்  தருமாறு கேட்டிருக்கிறோம். அந்த ஒவ்வோர் உறுப்பினர்களின் பங்கு பற்றுதல்களுடன் ஒரு செயற்பாட்டு குழு ஒன்றை நியமித்து என்ன மாதிரியான செயற்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து அதை செயல்படுத்துவது தான் சிறப்பாக இருக்கும்.

'கட்சி என்றும் முன்னணி எனச் செயற்பாடுகளை எடுக்காது, ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பில், ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட, ஒருமித்த கருத்தாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது' எனவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

ஆகவே இந்த முயற்சிக்கு எந்த ஒரு தனிக் கட்சியோ,  கூட்டணியோ அல்லது முன்னணியோ, என உரிமை கோராது, எல்லோரும் பங்காளிகளாக இதில் இணைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது என்றார்.

'இந்தக் கலந்துரையாடல் சுமூகமாக நடைபெற்றுள்ளது. இதன் தொடர் நடவடிக்கைகளை பொறுத்து, மக்கள் இந்த விடயங்களை அறிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த நடவடிக்கை குழு என்பது மக்கள் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் ஏனைய உத்திகளை எவ்வாறு வகுப்பது போன்ற விடயங்களையும் ஆலோசனைகளையும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு ஒரு சரியான இலக்கை நோக்கி பயணிப்போம் என்று எண்ணுகின்றோம்.

'ஆயிரக்கணக்கில் மக்கள் திரளக்கூடிய விதத்தில் மக்கள் போராட்டம் பொருத்தமாக இருக்கவேண்டும் அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதுவரை முன்னெடுத்த பல செயற்பாடுகளினால் பல வெற்றிகள் கிடைத்துள்ளன. இது போதுமானதல்ல. மேலும், பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .