2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

காணி விடுப்புக் கோரி வடக்கில் போராட்டங்கள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், எஸ்.றொசேரியன் லெம்பேட், எஸ்.என்.நிபோஜன்

காணி விடுப்பு கோரி, வடக்கின் பல பாகங்களிலும், இன்று (28) போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவ, மன்னார் ஆகிய பகுதிகளிலேயே, இந்தப் போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

முல்லைத்தீவு – கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில், மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்டமக்களால், இன்று (28) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, ​நேற்று முற்பகல் 10 மணியளவில் முல்லைத்தீவு புனித ராஜப்பர் தேவாலய முன்றலில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை கவனயீர்ப்புப் பேரணியாக வந்த மக்கள், மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டனர்.

மாவட்டச் செயலகத்துக்குள் மக்கள் செல்வதற்கு முற்பட்ட போது, மாவட்டச் செயலக வாயில் மூடப்பட்டு, மக்கள் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் அமைதிப் போராட்டம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களில், படையினர் வசமுள்ள காணிகளை நல்லிணக்க அடிப்படையில் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி, மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (28) முற்பகல் 9.30 மணியளவில், அடையாள அமைதி போராட்டமொன்று மன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம், மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் அ.பெனடிக்ற் குருஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, நல்லாட்சி அரசாங்கத்துக்குகு வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையில், தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி, படையினர் வசமுள்ள காணிகளை ஜனாதிபதி விரைவில் விடுவிக்க வேண்டுமெனவும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்பாணத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி, காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவான வாக்குறுதியொன்றை வழங்கிவிட்டுச் செல்ல வேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் நிறைவில், மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன் றாஸுக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

மகஜரை பெற்று கொண்ட மாவட்டச் செயலாளர், மக்களின் கோரிக்கை நியாயமானதெனவும் எனவே இந்த மகஜர், மக்களின் காணி தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மாவட்டச் செயலகம் சார்பாக, காணி விடுவிப்பு சம்மந்தமாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களை மேற்கொண்டு தருவதாகவும், அவர் மேலும் கூறினார்.

மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் போராட்டம்

முல்லைத்தீவில், இராணுவத்தினர், கடற்படையினர் சுவீகரித்துள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட மக்களால், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், நேற்று (28) முற்பகல் 11 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், அளம்பில், செம்மலை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களை ச்சேர்ந்த மீணவ குடும்பங்களும் கேப்பாப்புலவில் தமத நிலங்களை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களும் இணைந்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தின் இறுதியில், மாவட்டச் செயலாளரிடம் மகஜர் கையளிப்பதற்காக சென்றவர்கள் மாவட்டச் செயலக வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, குறித்த இடத்துக்கு வருகை தந்த மேலதிக மாவட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

கையொப்பம் அடங்கிய மகஜர் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில், விடுவிக்கப்படாத மக்கள் காணிகளை விரைந்து விடுவிக்க வேண்டுமென கோரி, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், இன்று (28) கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பிள்ளையார் கோவில் முன்பாக முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் பேரணி, மாவட்டச் செயலகம் வரை சென்றது.

குறித்த பேரணியில் கலந்துகொண்ட மக்களின் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளரைச் சந்தித்து, நாடளாவிய ரீதியில் காணிகள் விடுவிப்பது தொடர்பில் பெற்றுக்கொண்ட கையொப்பம் அடங்கிய மகஜரை அவரிடம் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X