2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவன் விடுவிப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், என்.ராஜ், நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரர் ஆலயம் முன்பாக கார்த்திகை தீபமேற்ற முற்பட்ட பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கார்த்திகை தீபம் ஆகையால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக இராமநாதன் வீதியில் இன்று (29) மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

அதனை அறிந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த இடத்தில் தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்றும் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறும் மாணவர்களுக்கு தெரிவித்தனர். 

அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் பொலிஸார் எச்சரித்தனர். இதனால் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், நீண்ட இழுபறியின் பின்னர் இரவு 7.45 மணியளவில் பொலிஸாரின் தடைகளை மீறி விளக்கேற்ற முற்பட்டபோது, மேற்படி மாணவனை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவனை, கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குச் கொண்டு சென்ற பொலிஸார், தீவிர விசாரணைகளின் பின்னர் அவரை விடுவித்துள்ளனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிரேஷ்ட சட்டத்தரணி வி. திருக்குமரன் ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, கார்த்திகை தீபமேற்றுவது இந்துக்களின் அடிப்படை உரிமை என பொலிஸாருக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

இதன்போது, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்படுவதாக தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் கைது செய்ததாகவும், வாக்கு மூலம் பெறவே பொலிஸ் நிலையத்துக்கு மாணவனை அழைத்து வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .