2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

’தொழிலாளிகளைக் காப்பாற்றுங்கள்’

Niroshini   / 2021 ஜனவரி 17 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

-எஸ்.நிதர்ஷன்

சங்கத்துக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடும் தொழிலாளிகளைக் காப்பாற்றுமாறு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் கடந்த ஒரு வார காலமாக சங்கத்தின் ஜனநாயக பண்புகளைக் காப்பாற்றுமாறு கோரி, சாகும்வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் தென்னை – பனம் பொருள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஏற்கெனவே இருந்த நிர்வாகத்தை ஊழல்கள் நிறைந்ததென காரணம் காட்டி, கூட்டுறவு ஆணையாளர் அந்த நிர்வாகத்தைக் கலைத்து, ஐந்து பேர் கொண்ட ஒரு புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்ததை எதிர்த்தும் உடனடியாகப் புதிய நிர்வாகத்தை மீண்டும் ஸ்தாபிக்குமாறும் அதற்கான தேர்தலை நடத்துமாறு கோரியுமே, இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதன் காரணமாக, இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய 550க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன எனத் தெரிவித்த அவர், தவறணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

சாதி ரீதியான ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்டுள்ள இந்த சமூகத்தை, ஆணையாளரின் மேற்படி முடிவானது அவர்களை பொருளாதார நெருக்கடிக்கும் தள்ளியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏறத்தாழ ஒரு வாரமாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டுறவுத்துறை சார்ந்த தொழிலாளிகளை இதுவரை கூட்டுறவு ஆணையாளர் நேரில் சென்று சந்திக்காமல் இருப்பது வருந்தத்தக்கது எனவும் கூறினார்.

எனவே, உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளின் நிலையை மனிதாபிமானத்தோடு அணுகுமாறும் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களின் போராட்டத்தை முடித்துவைத்து அவர்களின் உயிரைக் காப்பாற்றுமாறும், சுரேஷ் பிரேமசந்தின் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .