2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரதமரின் வருகைக்காக காத்திருந்த மக்கள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்காக் பயனாளிகளும் பொது மக்களும் ஐந்து மணித்தியாலங்கள் காத்திருந்த நிலையில், பிரதமர் உள்ளிட்ட அதிதிகள், ஐந்து நிமிடங்களில் நிகழ்வை முடித்துக் கொண்டு சென்றதால் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலரும் விசனம் வெளியிட்டுள்ள சம்பவமொன்று, வடமராட்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி - கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடுப்பிட்டி பகுதியில், அமைக்கப் பெற்ற புதிய வீடுகள் கையளிப்பு, காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்றுக் காலை 11 மணிக்கு இடம்பெறுமென பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பயனாளிகள் மற்றும் பொது மக்களை காலை 8.30 மணி முதல் 9 மணிக்கு முன்னதாக வருமாறும் அழைப்பு விடப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த நேரத்திற்கென வந்த பொது மக்கள் மற்றும் பயனாளிகள், பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும், நிகழ்வு ஆரம்பமாகுமெனக் குறிப்பிட்ட 11 மணிக்கு பிரதமர் உள்ளிட்ட அதீதிகள் வருகை தராதமையால், அங்கிருந்த பலரும் கடும் விசனமடைந்திருந்தனர். இவ்வாறான நிலையில் மாலை இரண்டு மணிக்கு பிரதமர் உள்ளிட்ட அதீதிகள் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

இதன் போது வீட்டுத் திட்டத்துக்கான அடிக் கல்லை பிரதமர் திரை நீக்கம் செய்து வைத்ததுடன், புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் நடாவெட்டித் திறந்து வைத்து அந்த வீடுகளையும் பிரதமர் உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்தக் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்களையும் பிரதமர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுக்காக, காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரையாக சுமார் ஐந்து மணிநேரம் பயனாளிகளும் பொது மக்களும் என நூற்றுக்கணக்கானோர் காத்திருந்த நிலையில், குறித்த நிகழ்வை சுமார் ஐந்து நிமிடங்களில் முடித்தவிட்டு, பிரதமர் உள்ளிட்ட அதிதிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த பலரும் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

அதே நேரம், இந்த வீட்டுத்திட்டம் கையளிப்பு மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை பெறும் பயனாளிகளைத் தவிர சமுர்த்தி உள்ளிட்ட வேறு திட்டங்களில் உள்வாங்கப்பட்ட பயனாளிகளும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அழைக்கப்பட்ட பயனாளிகள் பொது மக்கள் என அனைவரும், ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது.

இதில் சிலர் நிகழ்வு ஆரம்பிப்தற்கு முன்னதாகவே, சில பல காரணங்களின் நிமித்தம் சென்றிருந்த நிலையில், நிகழ்வு நடைபெறும் போது அங்கிருந்த பலரும் நிகழ்வு முடிவடைந்த பின்னர், கடும் அதிருப்தியை வெளியிட்டு விசனத்துடன் திரும்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X