2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’புதிய ஆட்சியில் பெரும்பான்மையுடன் தீர்வு’

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்-

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தங்களிடம் இல்லாததாலேயே புதிய அரசமைப்பு முயற்சி இப்போது தடைப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், “அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கின்ற அதே நேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். ஆகையினால் தீர்விற்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளோடு சேர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசமைப்பை நிறைவேற்றி இனப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவோம்” என்றார்.

யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு ஊடகவியலாளர்களை நேற்றிரவு (16) சந்தித்துக் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

இக் கலந்துரையாடலின் போது புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் குறித்து எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இக் கலந்துரையாடலில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஊடகவியியலாளர்களாகிய நீங்களும் அரசியல்வாதிகளாகிய நாங்களும் தான் இந்த நாட்டிலே சுதந்திரத்தை ஸ்தாபிக்கப் போராடிக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறோம். இன்றைக்கு சுதந்திரமான நீதி துறை உள்ளது. சுதந்திரமான  சூழ்நிலை உள்ளது. ஊடக சுதந்திரமும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 

“பாரியளவிலான கடன் சுமை இருந்த நாட்டையே நாங்கள் பொறுப்பெடுத்தோம். ஆனால் எங்களது திட்டங்கள் செயற்பாடுகளால் அந்தக் கடன் சுமைகளிலில் இருந்து விடுபட்டு இப்போது இந்த நாடு முன்னேறி வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களிலும் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறான அபிவிருத்திகளால் யாழ்ப்பாணம் மட்டுமல்ல. ஏனைய இடங்களும் முன்னோக்கிச் செல்லும். நாடும் அபிவிருத்தியடையுமென்று எதிர்பார்க்கின்றோம்.

“மேலும் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க முயற்சிகளைப் பொறுத்தவரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் நிறையப் பணிகளை செய்துள்ளோம். அதே போன்று தொடர்ந்தும் அந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் என்பற்றை நிறுவியிருக்கின்றோம். இதே போன்று இன்னும் நிறைய செய்ய வேண்டியும் இருக்கின்றது.

“இதேபோல, அரசியல் தீர்வு சம்மந்தமாக நிறையப் பேச்சுக்களை நடாத்தியுள்ளோம். அந்தப் பேச்சுக்களின் அடிப்படையில் தீர்வுக்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றொம். ஆனால் அந்த முயற்சிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

“ஏனெனில் நாம் முன்னெடுத்த புதிய அரசமைப்பு உருவாக்கத்தை நிறைவேற்ற பெரும்பான்மை பலம் தற்போது எங்களிடம் இல்லை. அனாலும் அதனை இறுதி செய்வதற்கான பேச்சுக்களை தொடர்ந்தும் நடாத்திக் கொண்டு தான் வருகின்றோம்.

“ஊடகவியிலாளர்களைப் பொறுத்தவரையில் வடக்கு தெற்கு என்ற பேதம் இல்லாமல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் ஊடகவியலாளர்களுக்கு கடன் திட்டங்களையும் வழங்கியிருக்கின்றோம். அதே போல தற்போதும் வழங்கி வருகின்றோம். அதே போல பெரும் பிரச்சனையாக இருந்த ஊடகவியலாளர் சார்ந்த அடையாள அட்டைகள் மற்றும் பயிற்சிகள் என்பனவும் வழங்கப்படுகிறன.

“படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகாரத்த தூபி ஒன்று யாழில் உள்ளது. அந்தத் தூபி அமைந்திருக்கும் வீதி அகலிப்புச் செய்து புனரமைக்கப்படுகின்ற போது அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். ஊடகவியலாளர்களுக்கான இழப்பீடுகள் சம்மந்தமான பேச்சுக்கள் முடிவடைந்துள்ளன. இதனால் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் முன்கொண்டு செல்ல வேண்டும். நாம் செய்து வருகின்ற திட்டங்களையும் செய்யப் போகின்ற அல்லது சொல்கின்ற திட்டங்கள் அல்லது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எமது வேட்பாளர் சஜித் பிரேமாதாச வெற்றி பெற வேண்டும்.

“இவ்வாறு எமது வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னராக நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி 120 இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதே நேரம் இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் ஆதரவுடன் ஆசனங்களைக் கைப்பற்றும்.

“அவ்வாறு நாங்களும் கூட்டமைப்பும் இணைந்து புதிய அரசமைப்பை நிறைவேற்றி தீர்வை அடைவதற்கு முயல்கின்ற போது இவ்வாறு தீர்வை வழங்குவதற்கு ஆதரவை தெரிவிக்கின்ற ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாங்கள் பெறுவோம். அவ்வாறு அடுத்த தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையைப் பெற்றால் புதிய அரசமைப்பை நிறைவேற்றுவோம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து ஊடகவியிலாளர்களின் கேள்விகளுக்கு பிரமர் பதிலளித்திருந்தார்.

கேள்வி –; தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளாக காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படுமா?

பதில் - எல்லா விடயங்கள் சம்மந்தமாகவும் தேர்தல் விஞ்ஞானத்தில் நாங்கள் பொதுவாக சொல்வோம். அதே நேரம் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்களுக்கு நாங்கள் சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம். குறிப்பாக காணாமலாக்கப்பட்டவர்கள் விடயத்தில். காணாமலாக்கப்ப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளோம். அந்த அலுவலகத்தினூடாக அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மேலும் இந்த விடயங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுவர்களுக்கு எதிராக எங்கு எங்கு நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை நாங்கள் செய்வோம். மேலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவையும் நியமிப்போம்.

கேள்வி – கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் உங்களது ஆட்சியில் சில விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது தெற்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்ந்தே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. வட - கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை ஏன் முன்னெடுக்கவில்லை?

பதில் - நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை சம்மந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். அந்த வழக்கில் வந்த திருப்பம் எதிர்பார்க்கவில்லை. அதே நேரம் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கிறோம். அதன் தொடராக வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட ஊடுகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்போம்.

கேள்வி – அவ்வாறாயின் இதுவரையில் ஏன் இந்த விசாரணை நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை?

பதில் - இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எங்களிடத்தில் இருக்கின்ற ஆட்கள் மிகக் குறைவு. ஆகையினால் ஒவ்வொன்றாக விசாரணைகளை முன்னெடுக்க முடியும். இருக்கின்ற பொலிஸார் போதாது. அனாலும் இருக்கின்றவர்களை வைத்து அனைத்து கொலைகள் சம்மந்தமாகவும் விசாரணைகளை நடாத்துவோம்.  அதுவும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் இருந்து நாங்கள் விசாரணைகளை ஆரம்பிப்போம்.

கேள்வி – காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐனாதிபதி வேட்பாளரான கோட்டாபய பல்வேறு விடயங்கள் குறித்துக் கூறியிருக்கின்றாரே?

பதில் - கோட்டாபய பலவெறு வித்தியாசமான விடயங்கள் குறித்து கூறியிருக்கின்றார். ஆகவே அவர் சொல்வதற்கும் அவர் சார்ந்தவர்கள் சொல்வதற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஆகவே அந்த உண்மைகளை அறிய வேண்டும். குறிப்பாக புலிகளின் தளபதி ரமேஸ் சரணடைந்தபோது தான் அவருடன் உரையாடியதாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எஸ்.பீ.திசாநாயக்க கடந்த வருடம் தெரிவித்திருக்கின்றார்.

ஆகவே கோட்டபாய இது தொடர்பில் திசாநாயக்கவிடம் கேட்க வேண்டும். கோட்டா கொத்த எண்ணிக்கைக்கும் உத்தியோகபூர்வ எண்ணிக்கைக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இவை சம்மந்தமாக எஸ்.பீ. திசாநாயக்கவிடம் கேட்டா கேட்க வேண்டும். அப்பொது இது குறித்து அறிந்து கொள்ள முடியும். மேலும் போர் நடந்த இடங்கள் எங்கு என்றாலும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து தான் இருக்கின்றன.

கேள்வி - இரணை மடுக் குடிநீரத் திட்டம் இப்போது எந்த நிலையில் உள்ளது. அதற்கான மாற்றுத் திட்டங்கள் முன்வைக்கப்படுவதன் நோக்கம் என்ன?

பதில் - இரணைமடுத் திட்டத்தை அமுல்ப்படுத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால் அங்குள்ள அரசியல் தான் அதற்குத் தடையாக இருக்கிறது. ஆகவே அங்குள்ள அரசியலைத் தீர்த்து வைத்தால் அந்த திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். ஆகையினால் அங்குள்ள அரசியல் பிரச்சனையை வடக்கிலுள்ள ஊடகங்கள் தீர்த்து வைக்க வேண்டும்.

இந்த இரணைமடுத் திட்டத்தை  நடைமுறைப்படுத்துகின்ற பொது அங்குள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அவர்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டமொன்றும் எம்மிடம் உள்ளது.

ஆகவே இரணைமடுத் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை. ஆனாலும் அதற்கான மாற்றுத் திட்டத்தினுடைய சாத்தியக் கூறுகள் பற்றியதான நடவடிக்கைகள் தான் எடுக்கப்படுகிறதே தவிர அத்திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை. அங்குள்ள பிரச்சனை தீர்க்கப்பட்டால் இரணைமடுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.

கேள்வி – மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் ஆளும் கட்சியே தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே.

புதில் - இந்தச் சட்டத்தின் பிரகாரம் எல்லை நிர்ணய சபையின் அறிக்கை வெளிவந்து அது நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை. கட்சிகளும் இணங்க வேண்டும். ஆனால் கட்சிகளும் இணங்காத நிலையே உள்ளது. ஆகவே கட்சிகள் இணங்கினால் அது நடக்கும் சாத்தியம் உள்ளது.

மேலும் தேர்தலை நடாத்துவதில் எமக்குப் பிரச்சனையில்லை. ஆனாலும் தேர்தலை நடாத்துவது தேர்தல் ஆணைக்குழு தான். இவ்வாறான நிலையில் அனைத்துக் கட்சிகளும் முதலில் ஐனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டுமெனக் கேட்டக் கொண்டதற்கிணங்கவே இப்போது ஐனாதிபதித் தேர்தல் நடக்கிறது. அதன் பின்னர் எல்லோரும் இணங்கினால் மாகாண சபைத் தேர்தலை நடாத்தலாம்.

கேள்வி – அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறு விடுவிப்பதற்கு ஏன் தாமதம் என்று கூற முடியுமா?

புதில் - அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குறைந்தளவிலானோரே எஞ்சியிருக்கின்றனர். அவ்வாறு எஞ்சியிரக்கின்றவர்களில் சிலர் தண்டணை கொடுக்கப்பட்டுள்ளவர்கள். இன்னும் சிலருக்கு வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதிலும் இன்னும் சிலர் முக்கிய பிரமுகர்களைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே இவ்வாறு பல காரணங்களின் அடிப்படையில் இருக்கின்றவர்களை எந்த அடிப்படையில் விடுவிப்பது என்பது தொடர்பான ஆராய்ந்து வருகிறோம்.

கேள்வி – தெற்கில் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் பொது பலசேனவின் தலைவர் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஐனாபதி பொது மன்னிப்பை வழங்கி விடுவித்திருந்தார். அதே ஞானசார தேரர் வடக்கிலும் வந்து நீதிமன்றை அவமதித்திருக்கின்றார். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில் - இவை தொடர்பான விசாரணைகள் நடந்து வருகிறது. ஆகவே நீதிமன்றை அவமதித்தமை குறித்தான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனையினால் இந்த அவமதிப்புக்கள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்படும்.

கேள்வி – காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் அலுவலகம் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றீர்கள். ஆனால் அந்த அலுவலகத்தின் செயற்பாடகள் நம்பகத் தன்மை இல்லை என்ற குற்றச்சாட்ட முன்வைக்கப்பட்டுள்ளதே?

பதில் - காணாமலாக்கப்பட்ட ஆட்கள் பற்றி அலுவலகம் சுயாதீன ஆணைக்குழுவின் கீழ் சுயாதீனமாக இயங்கும். அந்த அலுவலகம் அரசாங்கத்திற்கு கீழ் இயங்குவதில்லை. ஆகவே அந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் காணாமலாக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். ஆகையினால் அங்கும் அந்த அலுவலகம் தனது செயற்பாடகளை முன்னெடுத்து வருகின்றனது. ஆகவே அந்த அலுவலகத்தின் பணிகளை இங்கும் துரிதப்படுத்துமாறு நாம் கூறியிருக்கின்றோம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X