‘விடுமுறை நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன்’

சாட்சிகள் சம்பந்தமாக தலையீடுகளில் ஈடுபடவோ, அவர்களைப் பயமுறுத்தவோ, சாட்சியங்களில் தலையீடு செய்யவோ அவர்கள் எத்தனிக்காதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறான உடன்படிக்ககைகளின் நிமித்தமாக விடுமுறை சார்ந்த நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   

இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு நேற்று (19) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

என்னுடைய 17.06.2017ஆம் திகதி கடிதத்துக்கு உங்கள் பதில் கிடைத்தது. நன்றி. இன்றைய தினம் (19) காலை பேராயர் ஜஸ்டின் பேர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்களாலும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்களாலும் (கை​யெழுத்திடப்பட்டு) தரப்பட்ட குறிப்பும் கிடைக்கப்பெற்றேன்.   

உங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட சில விடயங்களுக்கு முதலில் விளக்கம் தருகின்றேன்.   
குறிப்பிட்ட அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக எந்தவிதத் தண்டனையும் அளிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து தமது சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளலாம், வாகனங்களைப் பாவிக்கலாம் இத்யாதி. சாட்சிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் முகமாகவே விசாரணைக்குழு விசாரணை நடத்தும் போது இரு அமைச்சர்களும் விடுமுறையில் இருக்க வேண்டும் எனப்பட்டது. அவர்களுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகளும் பெறப்பட்டுள்ளன.   

இரு அமைச்சர்கள் பற்றியும் உங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியாதிருப்பது பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், சுயாதீன சட்ட விசாரணையைத் தடைசெய்யும் விதமாக எந்த நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்க நீங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.   

சுயாதீனமான சட்ட விசாரணையை நிலைநாட்டுவதற்கும் அதன் பொருட்டு இரு அமைச்சர்களையும் அதற்காக உடன்படவைக்கவுமே ஒரு மாத காலம் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற உபாயத்தைக் கையாண்டேன்.   

தாங்கள், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர். தாங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரு அமைச்சர்களும் சுயாதீன சட்ட விசாரணையைத் தடை செய்யும் விதமாக நடந்துகொள்ளக்கூடாதென்று நீங்கள் அவர்களுக்கு அறிவுரை நல்க முன்வந்துள்ளீர்கள்.   

மேலும், இரு அமைச்சர்களும் நீதிக்கு பங்கம் ஏற்படாத விதத்தில் விசாரணையை நடத்த எல்லா உதவிகளை வழங்க உள்ளீடல்களில் ஈடுபடாதிருக்கவும் வேண்டி, இரு சமயத்தலைவர்களும் கோரியுள்ளனர்.   

அத்துடன், நேற்றைய தினம் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ தர்மலிக்கம் சித்தார்த்தன், ​ கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சகல தமிழ் மக்களின் நலன்சார்ந்து இரு கௌரவ அமைச்சர்களுடனும் பேச உடன்பட்டுள்ளார்கள். அவர்களுடன் பேசி சட்டத்தின் செல்திசையை மாற்றவோ, சாட்சிகள் சம்பந்தமாக தலையீடுகளில் ஈடுபடவோ, அவர்களைப் பயமுறுத்தவோ, சாட்சியங்களில் தலையீடு செய்யவோ அவர்கள் எத்தனிக்காதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறான உடன்படிக்கைகளின் நிமித்தமாக விடுமுறை சார்ந்த நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன்.   

நல்லை ஆதீனம், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கடிதம்

இதேவேளை, நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் பேரருள் திரு வணபிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும்,   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவரும் எம்.பியுமான மாவை சேனாதிராஜா, வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோருக்கு நேற்று (19) கடிதம் அனுப்பியிருந்தனர்.  

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   

மதத் தலைவர்களாகிய நாங்கள், அண்மைக்காலமாக வடமாகாணசபை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக எமது மக்களுடன் கலந்துரையாடியதன் விளைவாக இவ்விடயத்தை பொறுப்புள்ளவர்களுடன் கலந்துரையாடி ஓர் உகந்த தீர்வை மக்களின் நன்மை கருதி ஏற்படுத்த வேண்டிய அவசியத்தின் பிரகாரம் பின்வரும் ஆலோசனைகளை உங்கள் முன் வைக்கலாம் என கருதுகிறோம்.  

1. விசாரணையின் போது குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இரு அமைச்சர்களும் மீண்டும் தமது அமைச்சர் பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறோம். அத்துடன் அவர்கள் சம்மந்தமான குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகளை இடையூறுகள் இன்றிச் செய்வதை அவ் அமைச்சர்கள் ஒத்துழைப்பதுடன் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சகல உறுப்பினர்களும் கட்சித் தலைமைகளும் விசாரணைகளை சரியான முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலமே நல்லாட்சியை வடமாகாணசபையில் கொண்டுவர முடியும்.  

2 வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக கொண்ட மாகாணசபையை திறம்பட இயங்கச் சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொள்கிறோம்.  

3. ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை மீளபெற்று கொள்ளப்பட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டுகிறோம். தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளிக்காமல் சம்பந்தபட்ட தரப்பினர் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.    


‘விடுமுறை நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன்’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.