2020 நவம்பர் 28, சனிக்கிழமை

அரசியல்வாதிகள் அரசியலுக்கு அப்பால் சிந்தித்து ஒத்துழைக்க வேண்டும்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்திலுள்ள கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அரசியல் சிந்தனைக்கு அப்பால் எமது கல்வியை மீட்டெடுக்க  ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் யாழ். புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியின் மஹிந்தோததய ஆய்வுகூட கட்டிட திறப்பு விழாவில் இன்று  (23)  தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
 
தற்போது, கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகின்றது. யுத்தம் காரணமாக எமக்கு கிடைக்காத வாய்ப்புக்கள் தென்னிலங்கைக்கு கிடைத்தது. அவ்வாறான வாய்ப்புக்கள் கால தாமதமாக எமக்கு கிடைப்பதுடன், அவை விரைவாக கிடைக்கின்றது.
 
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், மஹிந்த சிந்தனையின் மஹிந்தோததய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு 5 கோடி ரூபா பெறுமதியான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
 
உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், 15 மில்லியன் பெறுமதியான வேறு உபகரணங்களும் மேலதிகமாக கிடைக்க இருக்கின்றது. அதுமட்டுமல்லாது விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்களுக்குத் தேவையான 6 கோடி ரூபா பெறுமதியான கட்டிடமும் உபகரணங்களும் விரைவில் கிடைக்கவுள்ளது.
 
ஆகவே, ஸ்ரீ சோமாஸ்கந்தா கல்லூரிக்கு குறுகிய காலத்திற்குள் ஏராளமான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கல்வி சமூகத்திற்கு கிடைத்த பெருமையாக நினைக்க வேண்டும். இதனை இப்பாடசாலைக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என நினைக்க வேண்டும்.
 
அதுமட்டுமல்ல, யாழ். மாவட்டம் மட்டுமன்றி வன்னி மாவட்ட கல்வி வளர்ச்சி துரிதமாக முன்னேறி வருகின்றன. அங்கு ஆசிரியர்கள் பிரச்சினை தான் முன்னிலை வகிக்கின்றது. அதிலும் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
 
அதனடிப்படையில், யாழ். மாவட்டத்தில் கல்வி அபிவிருத்தி கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது. மாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை மட்டும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துரையாடி வருகின்றனர். எதிர்காலத்தில் கல்வி வளர்ச்சி துரிதமாக முன்னேறுமென நம்புகின்றேன்.
 
தமிழ் மக்களை பொறுத்தவரையில், கல்விதான் எமது ஜீவாகாரம். யாழ். குடாநாட்டில் கல்வியாளர்கள் தான் மிகப்பெரிய முதலீடாக இருந்துள்ளார்கள். ஆனால், அந்நிலை யுத்தம் காரணமாக மாறிப் போய்விட்டது.
 
இது வடமாகாணம் கல்வி வளர்ச்சியின் முதலாவது மாகாணமாக இருந்தது. தற்போது 6 அல்லது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்நிலை ஏற்படுவதற்கு யுத்தம் ஒரு காரணமாக இருந்தது. ஆனால்,  எமக்கு கிடைத்திருந்த அந்த முதலாம் இடம் திரும்பவும் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
 
அந்த நம்பிக்கையினையை ஏற்படுத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இங்குள்ள கல்வியாளர்கள் மற்றும் அரசியலாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக அரசியலுக்கு அப்பால் சிந்தித்து, இழந்த போன மற்றும் அழிந்து போன கல்வியை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
 
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன வடமாகாண கல்வி சம்பந்தமாக பல விடயங்களை நாங்கள் முன்வைத்த போது, அவற்றினை எமக்கு செய்து தருகின்றவர். அதேவேளை, எமது கல்வி தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் பல கருத்துக்களை கூறிவருகின்றார். அத்துடன், அழிந்து போன எமது கல்வியை மீட்டெடுப்பதற்கு கருத்துக்களை கருத்தரங்கில் தெரிவித்திருந்தார்.
 
முதலமைச்சர் உட்பட அனைவரும் இணைந்து எமது கல்வி செயற்பாட்டினை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்பதுடன், எமது கல்வியை வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .