2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

'தோல்வியுறாத அரசியல்வாதியாக ஒதுங்குவதே நல்லது'

Thipaan   / 2017 மே 19 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

"நான், அரசியல் செய்தது போதும் என்ற எண்ணம் என்னுள் இப்போது தோன்ற ஆரம்பித்துள்ளது. வளர்ந்து வரும் இளைஞர் சமூகத்துக்குச் சந்தர்ப்பத்தை வழங்கி, ஒரு போதும் தோல்வியுறாத அரசியல்வாதியாக அரசியலிலிருந்து ஒதுங்குவது நல்லதென நினைக்கிறேன்" என, காணி, சுற்றாடல் துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். 

நாத்தாண்டி தேர்தல் தொகுதியில் நிர்மாணிக்கப்படும் “அசோகபுர” கிராமத்துக்கான சனசமூக நிலையத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்தவின் 37ஆவது பிறந்த தினத்தையொட்டியே இந்த சனசமூக நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நேற்று (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தில் புத்தளம் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் முதலாவது வீடமைப்புக் கிராமம் இதுவாகும். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், "நாட்டில், தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அரசாங்கம் கனவம் செலுத்திவருகிறது. மீண்டும் தொகுதிவாரித் தேர்தல் முறையில் தேர்தலை நடாத்துவதற்கே நாம் தயாராகி வருகின்றோம். அப்போது, மாவட்டத்தின் ஒரு தொங்கலில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாட்டத்தின் மறு முனைவரை ஓடத் தேவையில்லை.

தனது தொகுதியிலேயே சேவை செய்து கொண்டு இருக்க முடியும். அதே போன்று, பிரதேச சபை, நகர சபை தேர்தல்களும் விகிதாசார முறையிலேயே நடாத்துவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கான அடிப்படைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியும் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இம்முறையில் உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகளால் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாத்திரமின்றி சேவை செய்வதும் மிக இலகுவாக இருக்கும். தொகுதிவாரி, விகிதாசார முறையை ஏற்படுத்தினால் பாரிய நிதியை மீதப்படுத்திக் கொள்ள முடியும். இது மிகவும் சிறப்பான, பெறுமதியான ஒரு வேலைத்திட்டம் என்பதே எனது கருத்தாகும்.

தற்போது ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து, ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும்  இணைந்து ஏற்படுத்தப்பட்ட அரசாங்கமே தற்போது உள்ளது. இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எவராலும் முடியாது. 2020ஆம் ஆண்டில்தான் மீண்டும் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும்.

இப்போது, ஜனாதிபதியினதும் பிரதமரினதும் காலைப் பிடித்து இழுப்பதற்குச் சிலர் முயற்சிக்கின்றமையை எம்மால் காண முடிகிறது.  எதையிட்டும் நாம் குழப்பமடையத் தேவையில்லை. யார் எதைச் சொன்னாலும் ஒன்றிணைந்த அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும். அவ்வாறு இல்லாவிட்டால், நாம் முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்திப் பணிகள் தடைபட்டுவிடும்.

நாம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்கள் இல்லாமல் போய்விடும்.  இந்த இணைப்பை ஒருபோதும் உடைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என, ஜனாதிபதியும் கூறியிருந்தார்" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X