2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

புத்தளத்தில் இளம் பெண் குத்திக் கொலை

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

        alt                                (எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுக்கச்சி கல்குளம் பிரதேசத்தில் நேற்றிரவு இளம் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதத்துடன் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு வேளையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீமதீ அனுருத்திகா மெனிக்கா எனும், 29 வயதான 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

காணிப்பிரச்சினை ஒன்றே இக்கொலைக்கு காரணம் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பாக பொலிஸார் தெரிவித்துள்ளதாவது: இப்பெண்ணின் கணவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வி்ட்டு விட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சென்றுவிட்ட பின் தனது வீட்டில் பிள்ளைகளுடன் இப்பெண் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன் பின்னர் வீட்டை விட்டு பிள்ளைகளுடன் சென்றுவிடுமாறு அடிக்கடி இப்பெண்ணின் கணவருடைய தாயும் தந்தையும் இப்பெண்ணை அச்சுறுத்தி வந்துள்ளனர்.

சம்பவ தினம் கூரிய ஆயுதம் ஒன்றையும் எடுத்துக் கொண்டு அவ்வீட்டுக்கு வந்த அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தி குழப்பம் விளைவித்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர் தனது கையிலிருந்த கூரிய ஆயுதத்தினால் அப்பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் அப்பெண்ணின் கையிலிருந்த ஒன்றரை வயது குழந்தையும் காயமடைந்து நிலத்தில் வீழ்ந்துள்ளது.

பின்னர் அப்பெண்ணைத் துரத்தித் துரத்தி சந்தேக நபர் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்பெண் தனது வீட்டின் பின்புறம் சென்று நிலத்தில் வீழ்ந்து இறந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டதில் காயமடைந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட நீதிபதி சேசிரி ஹேரத் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று பகல் சென்று விசாரணைகைளை மேற்கொண்டதுடன், இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு  உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் உதயனந்த தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--